மாவட்டத்தில் நாள் முழுவதும் சாரல் மழை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
நாமக்கல், தென்கிழக்கு அரபிக்கடலில், கேரள கடலோர பகுதிகளுக்கு அப்பால் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலவுகிறது. இதனால், வடகிழக்கு பருவமழை, தமிழக வட கடலோர மாவட்டங்களில் தீவிரமடைய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில், மதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும், 22 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில், நேற்று காலை முதல், சாரல் மழை பெய்ய துவங்கியது. இந்த மழை, விட்டு விட்டு நாள் முழுவதும் நீடித்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. தொடர் சாரல் மழை காரணமாக, பொதுமக்கள் வெளியே வராமல் வீட்டுக்குள் முடங்கினர். மேலும், வெளியே வந்தவர்களும், குடையை பிடித்துக்கொண்டும், 'ரெயின் கோட்' அணிந்தும் சென்றனர். ஒரு சிலர் மழையில் நனைந்தபடி சென்றதை காணமுடிந்தது.மேலும், நாமக்கல் கடைவீதி, உழவர் சந்தை உள்ளிட்ட பகுதிகளில், மக்கள் நடமாட்டம் குறைந்ததால், ஜவுளி, நகை, வர்த்தக நிறுவனங்கள், சந்தைகளில் விற்பனை வெகுவாக பாதிக்கப்பட்டது. நேற்று முன்தினம் மாலை தொடங்கி, இரவு வரை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. தீபாவளியை உற்சாகமாக கொண்டாடும் நிலையில், மழை காரணமாக பெரும்பாலான மக்கள் ஏமாற்றமடைந்தனர்.நேற்று முன்தினம் காலை, 6:00 முதல், நேற்று அதிகாலை, 6:00 மணி வரை, 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு வருமாறு (மிமீ.,): குமாரபாளையம், 14.20, நாமக்கல், 20, புதுச்சத்திரம், 4, ராசிபுரம், 5, சேந்தமங்கலம், 13.60, திருச்செங்கோடு, 4.60, கலெக்டர் அலுவலகம், 5, கொல்லிமலை, 18 என, 84.40 மி.மீ., மழை பெய்துள்ளது.'ரெயின் கோட்'விற்பனை ஜோர்தீபாவளி விடுமுறை யால், பொதுமக்கள் வீடுக ளிலேயே முடங்கினர். இருப்பினும் பல்வேறு பணிகளுக்காக வெளியில் சென்ற மக்கள் மழையில் நனையாமல் இருக்க, குடை, ரெயின் கோட்டுடன் சென்றனர். சிலர், நகர் பகுதியில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த கடைகளில், குடை, ரெயின் கோட் வாங்கி சென்றனர். இதனால் விற்பனை ஜோராக நடந்தது. இதுகுறித்து, கர்நாடகாவை சேர்ந்த ரெயின் கோட் விற்பனையாளர் பசவராஜூ கூறியதாவது: கர்நாடகா மாநிலம், பெங்களூரில் இருந்து பல்வேறு வண்ணம், அளவுகளில் தரமான ரெயின் கோட், நாமக்கல்லுக்கு கொண்டுவந்து சாலையாரம் கடைவிரித்து, 250 ரூபாயில் இருந்து, 500 ரூபாய் வரை விற்பனை செய்கிறோம். சீசன் என்பதால் ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.