உழைத்தால் இந்த இயக்கத்தில் மட்டும் தான் பதவி தேடி வரும்: தங்கமணி
நாமக்கல் :அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., 'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற பிரசார பயணத்தை, நாமக்கல் மாவட்டத்தில், வரும், 19, 20, 21 என, மூன்று நாட்கள் மேற்கொள்கிறார். அதையொட்டி, ஆலோசனை கூட்டம், நாமக்கல்லில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. முன்னாள் அமைச்சர் சரோஜா, ப.வேலுார் எம்.எல்.ஏ., சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமை வகித்து பேசியதாவது:நாம் உழைத்தால், இந்த இயக்கத்தில் மட்டும்தான் எந்த பதவி வேண்டுமானாலும் தேடி வரும். நம் இத்தனை பேரின் உழைப்பால் தான், கடந்த லோக்சபா தேர்தலில், குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தோம். இதை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு, வரும் சட்டசபை தேர்தலில், மாவட்டத்தில் உள்ள, ஆறு சட்டசபை தொகுதிகளிலும் வெற்றிபெறுவோம். நாமக்கல் மாவட்டத்திற்கு வருகை தரும் பொதுச்செயலாளர் ஈ.பி.எஸ்.,சை அனைத்து சார்பு அணியினரும், சிறப்பாக வரவேற்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.நாமக்கல் மாவட்ட வர்த்தகர் அணி செயலாளர் தமிழ்மணி, மாநில இணை செயலாளர் மோகன், மாநில வக்கீல் அணி துணை செயலாளர் பாலுசாமி, ஐ.டி., விங்க் மாவட்ட செயலாளர் முரளிபாலுசாமி, சார்பு அணி மாவட்ட, ஒன்றிய, நகர, டவுன் பஞ்., நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.