ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கைக்கு அழைப்பு
நாமக்கல்: தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், விதவை பெண்கள், கணவனால் கைவிடப்பட்டோர், நலிவுற்ற, ஆதரவற்ற பெண்கள், முதிர் கன்னிகள் ஆகியோருக்கு தேவையான திட்டங்களை வகுத்து, சமூகத்தில் பாதுகாப்புடன் வாழ, 'தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம்' அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான உறுப்பினர் சேர்க்கை, ஊராட்சி ஒன்றியம் வாரியாக நடந்து வருகிறது.நாமக்கல் மாவட்டத்தில், 15 ஒன்றியங்களிலும் நலவாரியத்திற்கான உறுப்பினர் பதிவு நடந்து வருகிறது. இதில், ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, விதவை சான்றிதழ், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, மொபைல் எண் ஆகியவை பெறப்படுகின்றன. கடந்த, 4ல் தொடங்கிய உறுப்பினர் சேர்க்கை, ஒவ்வொரு ஒன்றியம் வாரியாக நடந்து வருகிறது. நாமக்கல் யூனியன் அலுவலகத்தில், சமூக நலத்துறையின், 'சகி' பிரிவு ஊழியர்கள், பெண்களிடம் ஆவணங்களை பெற்றனர்.இதுவரை, எலச்சிபாளையம், எருமப்பட்டி, கபிலர்மலை, கொல்லிமலை, மல்லமுத்திரம், மோகனுார், நாமகிரிப்பேட்டை, நாமக்கல் உள்ளிட்ட ஒன்றியங்களில் முடிந்துள்ளது. பள்ளிப்பாளையம், பரமத்தி, புதுச்சத்திரம், சேந்தமங்கலம், ராசிபுரம், திருச்செங்கோடு, வெண்ணந்துார் ஆகிய ஒன்றியங்களுக்கு, உறுப்பினர் பதிவு முகாம், வரும், 21ல் நிறைவடைகிறது. இந்த நலவாரிய பதிவு முகாமில் விதவைகள், ஆதரவற்ற பெண்கள் பதிவுசெய்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.