கூட்டு குடிநீர் திட்டம் சோதனை ஓட்டம்
ராசிபுரம்: ராசிபுரம் நகராட்சி பகுதியில் புதிய கூட்டு குடிநீர் திட்டப்பணி நடந்து வருகிறது. இதில், 99 சதவீத பணிகள் முடிந்துள்ளன. இறுதிக்கட்ட பணியாக, ராசிபுரம் பழைய பஸ் ஸ்டாண்டின் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அருகே மெயின் வால்வு அமைக்கும் பணி தொடங்கியது. இதற்காக, ஐந்து நாட்கள் நகர் முழுவதும் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டது. இப்பணி, நேற்று காலையுடன் முடிவடைந்தது.இதையடுத்து, புதிய கூட்டு குடிநீர் திட்டத்தில் குடிநீர் வினியோக சோதனை ஓட்டம் தொடங்கியது. இப்பணி வெற்றிகரமாக முடிந்து விட்டதாக அதிகாரிகள் உறுதிபடுத்தியபின், உடனடியாக புதிய கூட்டு குடிநீர் திட்டத்தில் குடிநீர் வினியோகம் தொடங்கும் என, நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். புதிய கூட்டு குடிநீர் திட்டம் பயன்பாட்டிற்கு வந்தால் நகராட்சி முழுவதும் தடையின்றி போதுமான அளவு தண்ணீர் கிடைக்கும் என, பொதுமக்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.