தொடர் மழை எதிரொலி 23 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியதால் மகிழ்ச்சி
நாமக்கல், டிச. 18-தொடர் மழை காரணமாக, மாவட்டத்தில் உள்ள, 23 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால், விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.தமிழகத்தில், தென்மேற்கு பருவமழை முடிந்து, வடகிழக்கு பருவமழை கடந்த அக்.,ல் துவங்கியது. தொடர்ந்து, மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும், பரவலாக மழை பெய்தது. அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில், இரண்டு மாதங்களாக மழை பெய்து வருகிறது. 'பெஞ்சல்' புயல் காரணமாகவும், மாவட்டத்தில் பரவலாக ஒரு சில இடங்களில், கனமழையும், பல இடங்களில் லேசான மழையும் பெய்தது.நாமக்கல் மாவட்டத்தில், 500-க்கும் மேற்பட்ட ஏரி, குளங்கள் உள்ளன. இவற்றில், 100 ஏக்கர் பரப்பளவிற்கு மேல் உள்ள பெரிய ஏரிகளை, பொதுப்பணித்துறையினர் பராமரித்து வருகின்றனர். பொதுப்பணித்துறை பராமரிப்பில், 79 ஏரிகள் உள்ளன. அவற்றில், பல ஏரிகள், தொடர் மழை காரணமாக நிரம்பி உள்ளன. மின்னக்கல் ஏரி, சேமூர் பெரிய ஏரி, பருத்திப்பள்ளி ஏரி, இலுப்புலி ஏரி, செருக்கலை ஏரி, இடும்பன் குளம் ஏரி, பாலமேடு சின்ன ஏரி, மாமுண்டி அக்ரஹாரம் ஏரி, மாணிக்கம்பாளையம் ஏரி, ஏமப்பள்ளி ஏரி, தேவனாம்பாளையம் ஏரி, துத்திக்குளம் ஏரி, மல்லசமுத்திரம் சின்ன ஏரி, பெரிய ஏரி, பெரியகுளம் ஏரி, பொம்மசமுத்திரம் ஏரி, வேட்டாம்பாடி ஏரி என, மொத்தம், 17 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன.நாமக்கல் மாவட்டத்தின் ஆண்டு இயல்பு மழையளவு, 716.54 மி.மீ., இந்தாண்டு தொடக்கம் முதலே நல்ல மழை பெய்து வருகிறது. இதுவரை, 800 மி.மீ., மேல் மழை பெறப்பட்டுள்ளது.கடந்த வாரத்தில் பெய்த கனமழைக்கு மாவட்டத்திலேயே பெரிய ஏரியான துாசூர் ஏரி உள்பட மேலும், 6 ஏரிகள் நிரம்பி உள்ளன. அதன் மூலம், மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக இதுவரை நிரம்பிய ஏரிகளின் எண்ணிக்கை, 23 ஆக உயர்ந்துள்ளது.மேலும், 7 ஏரிகள், 75 சதவீதம், 3 ஏரிகள், 50 சதவீதம், 4 ஏரிகள், 25 சதவீதம் நிரம்பி உள்ளன. 38 ஏரிகளில் மிகவும் குறைந்த அளவே தண்ணீர் உள்ளதால், அப்பகுதி மக்கள் கவலையடைந்துள்ளனர்.