வக்கீல் சங்கத்தினர் 2ம் நாள் ஆர்ப்பாட்டம்
நாமக்கல், நாமக்கல் திருநகரை சேர்ந்தவர் பழனிசாமி, 77; தொழில் அதிபரான இவர், 2024 ஜன., 31ல், வீட்டில் துாக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக, நாமக்கல் சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்குப்பதிவு செய்து, பழனிசாமியை தற்கொலைக்கு துாண்டியதாக, நாமக்கல்லை சேர்ந்த வக்கீல் ஆறுமுகம் உள்பட, 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.இதற்கிடையே, கடந்த, 15 இரவு வக்கீல் ஆறுமுகத்தை, 45, சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர். இவரது கைதை கண்டித்தும், வக்கீல்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரியும், நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன், இரண்டாம் நாளாக, குற்றவியல் வக்கீல்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்க செயலாளர் கணேசன் தலைமை வகித்தார். வக்கீல்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.