நீதிமன்றங்களை புறக்கணித்த வக்கீல்கள்
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், வக்கீல்கள் நேற்று நீதிமன்ற பணியை புறக்கணித்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் நீதிமன்ற வளாகத்தில் கண்ணன் என்ற வக்கீலை, அங்கு பணியாற்றும் ஆனந்தகுமார் என்பவர் சரமாரியாக வெட்டியதில் பலத்த காயமடைந்தார். அவர் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார். இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில், வக்கீல்கள் நேற்று போராட்டம் நடத்தி, நீதிமன்ற பணியை புறக்கணித்துள்ளனர். அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றம், ராசிபுரம், திருச்செங்கோடு, பரமத்தி, குமாரபாளையம், சேந்தமங்கலம் ஆகிய கிளை நீதிமன்றங்களில் பணியாற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வக்கீல்கள் நேற்று பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர். அவர்கள் இன்றும் பணி புறக்கணிப்பில் ஈடுபட உள்ளனர்.