மாவட்டத்தில் 457 கைவினைஞர்களுக்குதொழில் தொடங்க கடன் உதவி: எம்.பி.,
நாமக்கல்:''நாமக்கல் மாவட்டத்தில், முதற்கட்டமாக, 457 கைவினைஞர்களுக்கு தொழில் தொடங்க கடன் உதவி வழங்கப்படும்,'' என, எம்.பி., ராஜேஸ்குமார் பேசினார்.தமிழக முதல்வர் ஸ்டாலின், காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்த அரசு விழாவில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில், கைவினை கலைஞர்களுக்கான நிதி உதவி திட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விழாவிற்கு, கலெக்டர் உமா தலைமை வகித்தார். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார் பங்கேற்று, 11 பேருக்கு, மூன்று லட்சம் ரூபாய் மானியத்தில், 15 லட்சம் ரூபாய் மதிப்பில் கடன் உதவி வழங்கி பேசியதாவது:கலைப்பொருட்கள் தயாரிப்பு மற்றும் கைவினை தொழிலில் ஈடுபட்டுள்ளோருக்கு மேம்பட்ட பயிற்சி அளிக்கவும், மானியத்துடன் கூடிய ஜாமின் இல்லா கடன் வழங்கவும், அவர்களின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துவும், ஆண்டுதோறும், 10,000 பேர் பயன் பெறும் வகையில், 20 கோடி ரூபாய் மதிப்பில், கைவினை திட்டத்தை தமிழக முதல்வர் தொடங்கி வைத்துள்ளார்.இத்திட்டத்தின் கீழ், தையல் கலைஞர், மண்பாண்டம் முனைவோர், சிற்ப கைவினைஞர், தச்சு வேலை செய்வோர், பூ தொடுப்போர், பூ அலங்காரம் செய்வோர், சிகை அலங்காரம் செய்வோர், அழகுக்கலை நிபுணர் உள்ளிட்ட பலர் கைவினை தொழிலில் ஈடுபட்டுள்ளோர், தொழில் நுட்பத்துடன் கூடிய கருவிகள் கொண்டு தொழில்புரிய, மூன்று லட்சம் ரூபாய் வரை ஜாமின் இல்லாமல் மானியத்துடன் கூடிய கடனுதவி வங்கிகள் மூலம் வழங்கப்படும்.கடன் தொகையில், 25 சதவீதம், அதிகபட்சம், 50,000 ரூபாய் வரை மானியமாக வழங்கப்படும். கடனை திருப்பி செலுத்தும் காலத்தில், ஐந்து சதவீதம் வரை வட்டி மானியமும் வழங்கப்படும். அனைத்து அரசு மற்றும் தனியார் வணிக வங்கிகள், தாய்கோ வங்கி, கூட்டுறவு வங்கி மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மூலம் இத்திட்டத்தின் கீழ் கடன் வழங்கப்படும். நாமக்கல் மாவட்டத்தில், முதற்கட்டமாக, இத்திட்டத்தின் கீழ், 654 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 457 பேருக்கு கடனுதவிகள் வழங்க வங்கிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் பேசினார்.