ஆடு திருடி தப்பியபோது கிணற்றில் விழுந்தவர் மீட்பு
நாமகிரிப்பேட்டை, நாமகிரிப்பேட்டை ஒன்றியம், ஆயில்பட்டி அடுத்துள்ள உரம் பகுதியில் உள்ள விவசாய கிணற்றில், நேற்று மதியம், முனகல் சத்தம் கேட்டுள்ளது. இதை கேட்ட அப்பகுதி விவசாயிகள், கிணற்றில் எட்டிப்பார்த்துள்ளனர். அப்போது, கிணற்றுக்குள் காயமடைந்த நிலையில், 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் தண்ணீரில் தத்தளித்து கொண்டிருப்பது தெரிந்தது. ஆயில்பட்டி போலீஸ் மற்றும் ராசிபுரம் தீயணைப்பு துறையினருக்கு, அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர், ஒரு மணிநேரம் போராடி அவரை மீட்டனர். அவரிடம் விசாரித்தபோது, கிணற்றில் விழுந்தவர் ராசிபுரம் அடுத்த பட்டணம் முனியப்பன்பாளையம் பகுதியை சேர்ந்த பரமசிவம் மகன் பழனிவேல், 45 என்பது தெரிய வந்தது. மேலும், பழனிவேலும் அவரது நண்பரான அதே பகுதியை சேர்ந்த நரேஷ்குமார், 35, என்பவரும், நேற்று முன்தினம் இரவு, தம்மம்பட்டி, வசந்தம் நகர் பகுதியில் இருந்து ஒரு ஆட்டை திருடிக்கொண்டு டூவீலரில் சென்றுள்ளனர். போலீசாரை பார்த்ததும் ஆட்டை விட்டுவிட்டு, இரண்டு பேரும் ஆளுக்கு ஒரு பக்கம் தப்பி ஓடியுள்ளனர். இதில், பழனிவேல் தவறி கிணற்றில் விழுந்துள்ளார், நரேஷ்குமார் தப்பிவிட்டார்.அடிபட்ட பழனிவேல், நீச்சல் தெரிந்ததால் கிணற்றில் கல்லை பிடித்துகொண்டு விடிய விடிய அப்படியே இருந்துள்ளார். நேற்று மதியம் அவ்வழியாக வந்த விவசாயிகள், முனகல் சத்தம் கேட்டு உதவி செய்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து ஆயில்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.