போதமலையில் புதிதாக அமைக்கப்பட்ட சாலையில் காரில் சென்ற எம்.பி., ராஜேஸ்குமாருக்கு வரவேற்பு
ராசிபுரம், ராசிபுரம் அடுத்த போதமலை கீழூரில், 105 குடும்பங்களை சேர்ந்த, 648 பேர், மேலுாரில், 50 குடும்பங்களை சேர்ந்த, 362 பேர், கெடமலையில், 80 குடும்பங்களை சேர்ந்த, 396 பேர் என, மொத்தம், 1,406 பேர் வசிக்கின்றனர். போதமலைக்கு சாலை வசதி இல்லாமல் சிரமப்பட்டு வந்தனர். தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பின் சாலை அமைக்கும் பணி தீவிரமடைந்தது. மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஸ்குமார் எம்.பி., பசுமை தீர்ப்பாயம் சென்று தடையில்லா சான்று பெற்றார். மேலும், வனத்துறை விதித்த கட்டுப்பாடுகள், மரக்கன்று வளர்ப்பது உள்பட பல்வேறு நிபந்தனைகளை சரி செய்து சாலை அமைக்க அனுமதி பெற்றார்.கடந்த, 2024ல் நபார்டு திட்டத்தில், கீழூர், மேலுார், கெடமலையை இணைக்கும் வகையில், 139.65 கோடி ரூபாய் மதிப்பில், 31 கி.மீ., நீளத்திற்கு போதமலையில் சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. நேற்று முன்தினம் போதமலை கீழூருக்கு முதல் முதலாக சாலை வழியாக காரில் சென்ற, எம்.பி., ராஜேஸ்குமார், அமைச்சர் மதிவேந்தன் ஆகியோருக்கு, மலைவாழ் மக்கள் சிறப்பான வரவேற்பளித்தனர். அப்போது, எம்.பி., ராஜேஸ்குமார் பேசுகையில், ''மலைவாழ் மக்களுக்கு சாலை கிடைத்துவிட்டது. இதனால் பஸ் வசதி, ரேஷன் கடை, மருத்துவ வசதி, வேளாண் விரிவாக்கம் மையம், குடிநீர் வசதி, சமுதாய கூடம், ஒவ்வொரு குடும்பத்தினரும் கிணறு அமைக்க நிதி உதவி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் அடுத்தடுத்து கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார். வெண்ணந்துார் ஒன்றிய செயலாளர் துரைசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.