விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.2.45 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு
குமாரபாளையம்,: விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு, இழப்பீட்டு தொகையாக, 2 கோடியே, 44 லட்சத்து, 95,000 ரூபாய் வழங்க வேண்டும் என, ஈரோடு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.குமாரபாளையம் புத்தர் தெருவை சேர்ந்தவர் சரவணன், 44; துபாயில் இளநிலை பொறியாளராக பணியாற்றி வந்தார். இவரும், இவரது மகள் பிரியதர்சினி, 8, நண்பர்கள் முருகன், 43, வெங்கடேசன், 44, இவரது மகன் அர்சித், 12, ஆகியோர், கடந்த, 2017 டிச., 23ல், 'மாருதி ஸ்விப்ட்' காரில் சபரிமலை புறப்பட்டனர். வெங்கடேசன் காரை ஓட்டினார்.திருச்செங்கோடு - வேலுார் சாலையில், சித்தாளந்துார் அருகே சென்று கொண்டிருந்தபோது, அதே சாலையில் எதிர் திசையில் வேகமாக வந்த, 'மாருதி ஸ்விப்ட் டிசையர்' கார், இவர்கள் வந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், சரவணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சரவணன் இறப்புக்கு இழப்பீடு கோரி, அவரது மனைவி கவுசல்யா, மகள் பிரியதர்சினி சார்பில் ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.இதன் விசாரணை முடிந்த நிலையில், கடந்த, 20ல் தீர்ப்பு வழங்-கப்பட்டது. அதில், 'மனுதாரர்களுக்கு விபத்து இழப்பீட்டு தொகையாக, 2 கோடியே, 44 லட்சத்து, 95,000 ரூபாயை இன்-சூரன்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும்' என, நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.