ப.வேலுாரில் இளைஞர்கள் பைக் சாகசம் வீடியோ வைரலால் 2 பேருக்கு காப்பு
ப.வேலுார்: ப.வேலுார் பஸ் ஸ்டாண்டில் இளைஞர்கள் பைக் சாகசத்தில் ஈடுபட்டதால் பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். விசாரணை நடத்திய போலீசார், இரண்டு பேரை கைது செய்தனர்.ப.வேலுார் பஸ் ஸ்டாண்டில், கரூர், சேலம், மதுரை, திண்டுக்கல், மோகனுார், காட்டுப்புத்துார், முசிறி, தொட்டியம், ஈரோடு, திருச்செங்கோடு ஆகிய பகுதிகளுக்கு பஸ்கள் சென்று வருகின்றன. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், பஸ் ஸ்டாண்ட் பரபரப்பாக காணப்பட்டது. மேலும், ப.வேலுார் வாரச்சந்தைக்கு வரும் பொதுமக்கள், விவசாயிகள் அதிகளவில் பஸ் ஸ்டாண்டுக்கு வந்திருந்தனர். இந்நிலையில், நேற்று மாலை, 6:00 மணிக்கு, ஆறுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பஸ் ஸ்டாண்டில், தங்களது டூவீலரில் சாகசத்தில் ஈடுபட்டனர். இதனால் பஸ் ஸ்டாண்டில் காத்திருந்த பயணிகள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதால், ப.வேலார் போலீசார் விசாரணை நடத்தி, பைக் சாகசத்தில் ஈடுபட்ட குப்புச்சிபாளையத்தை சேர்ந்த குணசேகரன் மகன் தனுஷ், 21, அதே பகுதியை சேர்ந்த ராமன் மகன் பாலமுருகன், 21, ஆகிய இருவரையும் கைது செய்து, டூவீலரை பறிமுதல் செய்தனர். மேலும், சாகசத்தில் ஈடுபட்ட மற்ற இளைஞர்களை தேடி வருகின்றனர்.