ப.வேலுார் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்ததால் அனிச்சம்பாளையத்தில் மணல் திருட்டு அதிகரிப்பு
ப.வேலுார், ப.வேலுார் அருகே, அனிச்சம்பாளையம் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்ததால், இரவு நேரத்தில் சரக்கு ஆட்டோ, டூவீலர்களில் மணல் திருட்டு ஜோராக நடந்து வருகிறது.மோகனுார் அடுத்த ஒருவந்துாரில் அரசு மணல் குவாரி செயல்பட்டது. இங்கிருந்து மணல் எடுத்து வரப்பட்டு, வலையப்பட்டி சாலை செவிட்டுரங்கன்பட்டியில் உள்ள அரசு மணல் சேமிப்பு கிடங்கில் சேமித்து வைத்து ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்பட்டது. இதில், முறைகேடுகள் நடப்பதாக எழுந்த புகாரால், 2023 செப்., 12 முதல் மணல் குவாரி செயல்படாமல் நிறுத்தப்பட்டது.இதனால், ப.வேலுார் சுற்று வட்டார பகுதிகளில் கட்டுமான பணிகளுக்கு மணல் தேவை அதிகரித்ததால், காவிரி கரையோர பகுதிகளில் மணல் திருட்டு அதிகரித்தது. காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால், சில தினங்களாக திருட்டு மணல் அள்ளுவது நிறுத்தப்பட்டது. தற்போது நீர்வரத்து குறைந்துள்ளதால், ப.வேலுார், அனிச்சம்பாளையம், நன்செய் இடையாறு, அண்ணா நகர், வெங்கரை, பொத்தனுார் ஆகிய பகுதிகளில் உள்ள காவிரி ஆற்றில் மணல் கொள்ளை அரங்கேறி வருகிறது. சரக்கு ஆட்டோ, டூவீலரில் மூட்டை கட்டி எடுத்து வந்து விற்பனை செய்து வருகின்றனர். இரவு, 11:00 மணி முதல், அதிகாலை, 3:00 மணி வரை காவிரி ஆற்றில் மணல் கொள்ளை நடக்கிறது. 20 க்கும் மேற்பட்ட டூவீலர்களில் மணல் கடத்தி, ஒரு மூட்டை மணல், 150 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர். மேலும், மணல் திருட்டுக்கு சாதகமாக தெரு விளக்குகளையும் உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். மணல் திருட்டில் ஈடுபவர்களை, போலீசார் கைது செய்தாலும் திரும்ப, திரும்ப மீண்டும் மணல் திருட்டில் ஈடுபடுகின்றனர். இதனால் அவர்களை, குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.