மாணவர்களை ஒரு துறையில் மட்டுமே கவனம் செலுத்த பெற்றோர் அழுத்தம் தரக்கூடாது: கலெக்டர் அறிவுரை
நாமக்கல்: நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவ கல்லுாரியில், பள்ளி, கல்லுாரிகளில் உள்ள மாணவர்களிடையே தற்கொலையை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை குறித்த ஆய்வு கூட்டம், நேற்று நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்து பேசியதாவது:பள்ளி பருவத்தில், மாணவ செல்வங்களை பாதிக்கும் குழந்தை திருமணம், தற்கொலை முயற்சி செய்தல், போதைக்கு அடிமையாதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் இருந்து பாதுகாப்பது குறித்து, ஆசிரியர், பெற்றோர் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இன்றைய நவீன உலகம் போட்டி நிறைந்தது. அதனால், பெற்றோர், மாணவ செல்வங்களை ஒரு துறையில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என, அழுத்தம் தரக்கூடாது. குறிப்பாக, மருத்துவ துறையில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என அழுத்தம் தரக்கூடாது.மருத்துவ துறையில் மருத்துவர் மட்டுமின்றி, மருத்துவம் சார்ந்த உடலியக்க மருத்துவம், மருந்தாளுனர், செவிலியர் போன்ற பல்வேறு துறைகளில் கவனம் செலுத்த ஊக்குவிக்கலாம். பெற்றோர், தங்களது குழந்தைகளின் எண்ணங்களை கருத்தில் கொண்டு, அவர்களது கனவை சுதந்திரமாக அடைவதற்கு ஊக்குவிக்க வேண்டும்.நாமக்கல் மாவட்டத்தில், குழந்தை திருமணங்களை தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை, இளம் வயது கர்ப்பம் ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாணவர்கள் நவீன உலகில் கல்வி தொடர்பான செயல்பாடுகளுக்கு மட்டும் மொபைல் போனை பயன்படுத்தி, தங்களது கல்வியை மேம்படுத்த கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி முதல்வர் சாந்தா அருள்மொழி, ஆர்.டி.ஓ., சுகந்தி, தனித்துணை கலெக்டர் பிரபாகரன், மாவட்ட கல்வி அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.