தோட்டத்து வீட்டில் மூதாட்டி படுகொலை தொடரும் சம்பவங்களால் மக்கள் அதிர்ச்சி
ப.வேலுார்: ப.வேலுார் அருகே, தோட்டத்து வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலுார் அருகே சித்தம்பூண்டி, குளத்துபாளையம் கிராமத்தைச் சேர்ந்த ராசப்பன் மனைவி சாமியாத்தாள், 67; ராசப்பன் சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். நள்ளிரவு 1:30 மணி
தம்பதிக்கு கிருஷ்ணமூர்த்தி, சங்கீதா என, மகன், மகள் உள்ளனர். இருவரும் திருமணமாகி வெளியூரில் வசிக்கின்றனர். சாமியாத்தாள் மட்டும் தோட்டத்தில் தனியாக வசித்தார்.உறவினர் வீட்டு திருமணத்துக்கு சாமியாத்தாள், நேற்று முன்தினம் காலை சென்றுள்ளார். அப்போது, தங்கச்சங்கிலி, தங்க வளையல் அணிந்து சென்றார். இதை மர்ம ஆசாமிகள் நோட்டமிட்டுள்ளனர். வீடு திரும்பியதும், வழக்கம் போல் வீட்டு வாசலில், கட்டிலில் துாங்கிக் கொண்டிருந்தார்.நள்ளிரவு 1:30 மணிக்கு வந்த மர்ம நபர்கள், சாமியாத்தாள் வாயை பொத்தி கழுத்தில் இருந்த நகையை தேடியுள்ளனர். நகை இல்லாததால் தங்கச்சங்கிலியை கேட்டு மிரட்டியுள்ளனர். அதிர்ச்சியடைந்த மூதாட்டி கூச்சலிட்டுள்ளார்.சுதாரித்த நபர்கள், கத்தியால் மூதாட்டி கழுத்தில் குத்தியுள்ளனர். தொடர்ந்து, வாய், முகத்தில் குத்தியுள்ளனர். ஆனாலும், சாமியாத்தாள் தொடர்ந்து போராடவே, தப்பி ஓடி விட்டனர். கழுத்தில் கத்திக்குத்து விழுந்ததால் பேச முடியாமல் தவித்த மூதாட்டி, பக்கத்து வீட்டில் உள்ள உறவினர்களுக்கு போன் செய்துள்ளார். ரத்தம் வெளியேறிக் கொண்டிருந்ததால் பேச முடியவில்லை. எதிர்முனையில் பேசிய உறவினர்கள் சந்தேகமடைந்து வீட்டுக்கு விரைந்தனர். ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த சாமியாத்தாளை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகர டப்பாவில் நகை
உடனடியாக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேல் சிகிச்சைக்காக கோவை கொண்டு செல்லும் வழியில் சாமியாத்தாள் இறந்தார்.நாமக்கல் எஸ்.பி., ராஜேஷ்கண்ணன், ப.வேலுார் டி.எஸ்.பி., சங்கீதா நேற்று காலை நேரில் சென்று ஆய்வு செய்தனர். நல்லுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். தோட்டத்து வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டது, அப்பகுதி மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. கொங்கு மண்டலத்தில் தோட்டத்து வீடுகளில் தனியாக வசித்த தம்பதி கொலை செய்யப்பட்டதை போல, இந்த சம்பவமும் நடந்திருப்பதால், போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.வழக்கமாக, சாமியாத்தாள் இரவில் துாங்கும் போது, முன்னெச்சரிக்கையாக தங்கச்சங்கிலி, இரண்டு வளையல்களை தகர டப்பாவில் போட்டு, வீட்டில் ஓரிடத்தில் மறைவாக வைத்து விடுவார். அதேபோல் தான் நேற்று முன்தினமும் நகைகளை மறைத்து வைத்துள்ளார். அதை பறிக்க நோட்டமிட்டு வந்த ஆசாமிகள், மூதாட்டி கூச்சலிட்டதால் தப்பி ஓடவே, நகைகள் கொள்ளை போகாமல் தப்பின.