விவசாயி வீட்டில் அச்சுறுத்திய மர நாய் சிறு கூண்டு வைத்து பிடித்த மக்கள்
ஓமலுார் விவசாயி வீட்டில் அச்சுறுத்தி வந்த மர நாயை அப்பகுதி மக்கள், சிறு கூண்டு வைத்து பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.சேலம் மாவட்டம் ஓமலுார் அருகே மேல்காமாண்டப்பட்டியை சேர்ந்த, விவசாயி யோகானந்தம், 44. இவர் மனைவி, இரு குழந்தைளுடன் வசிக்கிறார். இவரது வீட்டை சுற்றி, விவசாய தோட்டம், அருகே, 'கருங்கரடு' பெயரில் சிறு கரடு உள்ளது. ஒரு வாரமாக, யோகானந்தம் வீட்டுக்குள் அரிய வகை விலங்கு வந்து சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அந்த விலங்கு ஒரு வித சத்தத்தை எழுப்பியதால் குழந்தைகள் அச்சம் அடைந்தனர். மேலும் வீட்டை சுற்றி அங்கும் இங்கும் ஓடி சுற்றியது.இந்நிலையில் நேற்று அதிகாலை, அந்த விலங்கை, அப்பகுதி மக்கள் பிடித்து, சிறு கூண்டில் அடைத்து வைத்து, வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் அரிய விலங்கு சிக்கிய தகவல் பரவியதால், சிறுவர்கள், மக்கள் ஆர்வமுடன் வந்து பார்த்தனர். பின் டேனிஷ்பேட்டை வனத்துறையினர், விலங்கை பார்வையிட்டு, இது, 'மர நாய்' என தெரிவித்தனர். மேலும், 'அருகே உள்ள வனப்பகுதியில் இருந்து வந்திருக்கலாம்' என தெரிவித்து, மர நாயை பாதுகாப்பாக எடுத்து சென்று வனப்பகுதியில் விட்டனர்.இதுகுறித்து யோகானந்தம் கூறுகையில், ''முதலில் பார்த்தபோது பெருச்சாளி போன்று இருந்தது. மிக நீண்ட அளவில் வால் இருந்தது. பின் வனத்துறையினர் தெரிவித்தபோது தான் மர நாய் என்றே தெரிந்தது. அந்த நாய், வீட்டுக்கு வந்து அச்சுறுத்தியதால், சில நாட்களாக அருகே உள்ள வீட்டில் வசித்தோம். ஒரு வழியாக அதை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தோம்,'' என்றார்.