வங்கியில் கடன் பெற்று ரூ.5.77 லட்சம் மோசடி நடவடிக்கை கோரி மனு
நாமக்கல்: 'வங்கியில் கடன் பெற்று, 5.77 லட்சம் ரூபாய் அசல், வட்டி திருப்பி செலுத்தாமல் மோசடி செய்த நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மகளிர் சுயஉதவிக் குழுவினர், நாமக்கல் எஸ்.பி.,யிடம் மனு அளித்தனர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, சப்பையாபுரம் மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருகிறோம். நாங்கள், செல்லியம்மன் மகளிர் சுயஉதவிக்குழுவில் உறுப்பினராக உள்ளோம். எங்கள் குழுவில் உள்ள திலகம், பிரியதர்ஷினி, பூபதி ஆகியோரும் உறுப்பினராக உள்ளனர். எங்கள் குழுவில் வாங்கிய கடனை, மேற்கண்ட மூவரும் திருப்பி செலுத்தவில்லை. இதனால், வங்கி நிர்வாகம் வழக்கு தொடுத்துள்ளது. எங்கள் கடன் தொகை, 4.62 லட்சம் ரூபாய், வட்டி, 1.65 லட்சம் ரூபாய் என, மொத்தம், 6.27 லட்சம் ரூபாய் கட்ட வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள், போலீசார் முன்னிலையில், 50,000 ரூபாய் செலுத்திவிட்டனர். மீத தொகையை கட்டவில்லை. இதுதொடர்பாக வெண்ணந்துார் போலீசார் வழக்குப்பதிவு செய்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், 'ஆதாரம் இல்லாததால், ஒன்றும் செய்ய முடியாது. வழக்கு இல்லாமல் செய்துவிடுவேன். புரோ நோட்டை கிழித்து போடுங்கள்' என, போலீசார் மிரட்டுகின்றனர். நாங்கள் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளதால், வருவாய் இன்றி தவிக்கிறோம். அதனால், எங்களுக்கு சேரவேண்டிய பணத்தை பெற்றுத்தருவதுடன், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.