ராசிபுரம், நாமகிரிப்பேட்டையில் 31 வரை பி.எம்., கிசான் திட்டம்
ராசிபுரம், 'விவசாயிகள் கவுரவ நிதி பெறுவதற்கான சிறப்பு முகாம், 31 வரை நடக்கவுள்ளது' என, ராசிபுரம் வேளாண் உதவி இயக்குனர் தனலட்சுமி, நாமகிரிப்பேட்டை உமா மகேஸ்வரி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து, வெளியிட்ட செய்திக்குறிப்பு:பி.எம்., கிசான் திட்டத்தில் பயன்பெற தகுதியுடைய விவசாயிகள், 20வது தவணை தொகை, 2,000 ரூபாய் பெறுவதற்கான விண்ணப்பங்களை சரிசெய்யும் வகையில், நாமக்கல் மாவட்டத்தில் மே, 31 வரை சிறப்பு முகாம் நடக்கிறது. சிறப்பு முகாம்கள், நாமக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம், அஞ்சல் அலுவலகங்கள், பொது சேவை மையங்களில் நடக்கிறது.நில உடமை பதிவேற்றம் மற்றும் இ-கே.ஒய்.சி., பதிவேற்றம் செய்யாத விவசாயிகள் சம்பந்தப்பட்ட வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தையோ அல்லது பொது சேவை மையத்தையோ அணுகி பயன்பெறலாம். வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காத விவசாயிகள், சம்பந்தப்பட்ட வங்கிகளையோ அல்லது அஞ்சல் அலுவலகங்களில் புதிதாக வங்கி கணக்கு துவங்கியோ பயன்பெறலாம்.நில உடமை பதிவேற்றம் செய்யாத விவசாயிகளுக்கு மட்டுமே வரும், 20வது தவணை தொகை விடுவிக்கப்படும் என்ற வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளதால், நில உடமை பதிவேற்றம் செய்யாத விவசாயிகள் தாமதிக்காமல் நில உடமை விபரங்களை பதிவேற்றம் செய்து தொடர்ந்து இத்திட்டத்தில் பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது.மேலும், இத்திட்டத்தில் பயனாளி இறந்து விட்டால், அவரது ஆதார் எண், இறப்பு சான்றிதழை சம்பந்தப்பட்ட வட்டாரங்களில் சமர்ப்பித்து நிதியை நிறுத்தம் செய்ய வேண்டும். இறந்தவரின் வாரிசுதாரர்கள் பி.எம்., கிசான் திட்டத்தில் பயன்பெற தகுதியிருப்பின் தேவையான ஆவணங்களை பொது சேவை மையத்தில் சமர்ப்பித்து பதிவு செய்து இத்திட்டத்தில் பயன்பெறலாம்இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.