கோவில் திருவிழாவில் தகராறு போலீசார் சமாதான பேச்சுவார்த்தை
வெண்ணந்துார், வெண்ணந்துார், ஈஸ்வரன் கோவில் வீதி அருகே, நீதிகாத்த மாரியம்மன் கோவில் புதிதாக கட்டப்பட்டு, கடந்தாண்டு கும்பாபிஷேகம் நடந்தது. 20 ஆண்டுகளுக்கு முன், இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலால், கோவில் கட்ட முடியாமல் இருந்து வந்தது. ஒரு வழியாக, கடந்தாண்டு தான் புதிதாக கோவில் கட்டி முடிக்கப்பட்டது. இதையடுத்து, திருவிழா நடத்த, நேற்று கம்பம் நடுவிழா நடந்தது. இந்நிலையில், 20 ஆண்டுகளுக்கு முன், இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்னையின்போது, ஒப்பந்தம் போடப்பட்டது. அதில், ஒரு தரப்பினர், தை மாதத்திலும், மற்றொரு தரப்பினர் ஆடி மாதத்திலும் திருவிழா நடத்த ஒப்புக்கொண்டு கையெழுத்திட்டனர். அதன்படி, ஒருதரப்பினர், திருவிழா நடத்த ஏற்பாடு செய்து வந்தனர். ஆனால், மற்றொரு தரப்பினர் திருவிழா நடத்தக்கூடாது என, தடுத்தனர். இதனால் மோதல் சூழல் உருவானது.இதையடுத்து, வெண்ணந்துார் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, இருதரப்பினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், ராசிபுரம் தாசில்தார் சசிகுமார், ராசிபுரம் டி.எஸ்.பி., விஜயகுமார், வெண்ணந்துார் இன்ஸ்பெக்டர் சுகவனம் மற்றும் வருவாய் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கிடையே ஒரு தரப்பினர், கோவிலில் கம்பம் நட்டு விழாவை தொடங்கினர். இதனால் பதற்றமான சூழல் ஏற்பட்டதால், வருவாய் துறையினர் கோவிலுக்கு சென்று, நடப்பட்ட கம்பத்தை பிடுங்கி சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.