அரசு மருத்துவமனையில் மின்தடை; கலெக்டர் ஆய்வு செய்து எச்சரிக்கை
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், நேற்று முன்தினம் இரவு, கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மின் தடை ஏற்பட்டது. நாமக்கல் கலெக்டர் அலுவலக வளாகம் பின்புறம், அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை அமைந்துள்ளது. கடந்த, 17 இரவு, 7:30 மணிக்கு, திடீரென மின்தடை ஏற்பட்டது. உடனடியாக ஜெனரேட்டர் இயங்கவில்லை. இதனால், மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவு, உள்நோயாளிகள் சிகிச்சை பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு, பிரசவ வார்டு உள்ளிட்ட பகுதிகள் இருளில் மூழ்கின.இதையடுத்து, அங்கு பணியில் ஈடுபட்டிருந்த மருத்துவர்கள், தங்களது மொபைல் போன் டார்ச் வெளிச்சத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர். அரை மணி நேரத்திற்கு பின், ஜெனரேட்டர் இயங்கியது. தொடர்ந்து, மின் வினியோகம் செய்யப்பட்டது.இந்நிலையில், கலெக்டர் உமா, நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சீரான மின் வசதி குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது, 'நோயாளிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையிலும், எவ்வித புகாருக்கும் இடமளிக்காத வகையிலும், சீரான மின் வசதியை உறுதி செய்ய வேண்டும்' என, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.