எம்.சாண்ட், பி.சாண்ட் விலை உயர்வு ஜன.,7ல் போராட்டம் அறிவிப்பு
நாமக்கல், டிச. 25-''ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் விலையை குறைக்க வலியுறுத்தி, வரும் ஜன., 7ல் போராட்டம் நடத்தப்படும்,'' என, தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சம்மேளன தலைவர் செல்ல ராசாமணி தெரிவித்துள்ளார்.கொங்கு மண்டல பகுதியான நாமக்கல், சேலம், ஈரோடு, கோவை, திருப்பூர், கரூர் ஆகிய, 6 மாவட்டங்களில், கல்குவாரி, கிரசர் உரிமையாளர்கள் தன்னிச்சையாக, கடந்த, 1 முதல் எம்.சாண்ட், பி.சாண்ட், ஜல்லி உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலையை உயர்த்தி உள்ளனர்.இந்த விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி, நாமக்கல் கலெக்டரிடம் மனு அளித்தனர். இதையடுத்து, நேற்று நாமக்கல்லில், கலெக்டர் உமா தலைமையில் கல்குவாரி, கிரசர் உரிமையாளர்கள், கட்டுமான சங்கத்தினர், அரசு ஒப்பந்ததாரர்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடந்தது.அப்போது, 'தமிழக அரசின் கனவு இல்லத்திட்டத்தில் கட்டப்படும் வீடுகளுக்கு மட்டுமே ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலையை குறைத்து வழங்கப்படும். வேறு எக்காரணத்தை கொண்டும் விலை குறைக்க முடியாது' என, கிரசர், கல்குவாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர். இதனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.இதுகுறித்து, தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் செல்ல ராசாமணி கூறியதாவது:தமிழகத்தில் மணல் குவாரிகள் செயல்படாததால் கிரசர், கல்குவாரி உரிமையாளர்கள் சிண்டிகேட் அமைத்து ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட்களின் விலையை உயர்த்தி உள்ளனர். விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அதனால், வரும் ஜன., 7ல் நாமக்கல் மாவட்டத்தில் கட்டுமான சங்கத்தினர், மணல் லாரி உரிமையாளர்கள், அரசு ஒப்பந்ததாரர்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.