மேலும் செய்திகள்
நிழற்கூடத்துக்கு பூமி பூஜை
10-Jul-2025
ப.வேலுார், ப.வேலுாரில் இருந்து நாமக்கல் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், மேம்பாலம் அமைக்கும் பணி, இரண்டு இடங்களில் நடந்து வருகிறது. மேம்பாலத்தையொட்டி, இருபுறமும் சர்வீஸ் ரோடு அமைக்க, ஏற்கனவே இருந்த பயணியர் நிழற்கூடம் அப்புறப்படுத்தப்பட்டது. தற்போது, அதன் வழியாக சர்வீஸ் ரோடு அமைக்கப்பட்டு, அதில் வாகன போக்குவரத்து நடக்கிறது.இந்நிலையில், பரமத்தி டவுன் பஞ்.,க்குட்பட்ட வெள்ளாளபாளையம் பகுதியில் ஏற்கனவே பயணியர் நிழற்கூடம் இருந்த இடத்திலிருந்து, அரை கிலோ மீட்டர் துாரம் தள்ளி நிழற்கூடம் அமைக்கும் பணி நடந்தது. இதையறிந்த மறவாபாளையம், வெள்ளாளபாளையம், ஓவியம் பாளையத்தை சேர்ந்த கிராம மக்கள், பரமத்தி வேலுார் தாலுகா அலுவலகம் முன், அப்பகுதி மக்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதில், 'பழைய இடத்திலேயே நிழற்கூடம் அமைக்க வேண்டும்' என வலியுறுத்தி, தாசில்தார் முத்துக்குமாரிடம் மனு அளித்தனர்.ஆர்ப்பாட்டத்தில், நுாற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். பொது மக்களின் கோரிக்கையை ஏற்று பழைய இடத்திலேயே நிழற்கூடம் அமைக்கும் பணி, நேற்று காலை, 11:00 மணிக்கு நடந்தது. இதையறிந்த மற்றொரு தரப்பினர், இரண்டாவதாக தேர்வு செய்யப்பட்ட இடத்திலேயே நிழற்கூடம் அமைக்க வேண்டும் என வாக்குவாதம் செய்து, பணியை நிறுத்தினர். இதனால் தரப்பினருக்கும் இடையே மோதல் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டது.தகவலறிந்து வந்த ப.வேலுார் டி.எஸ்.பி., சங்கீதா, தாசில்தார் முத்துக்குமார் ஆகியோர், இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, நிழற்கூடம் பழைய இடத்திலேயே அமைக்கும் பணி நடந்தது. இதனால், நேற்று மதியம் வரை பரபரப்பு ஏற்பட்டது.
10-Jul-2025