உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நாமக்கல் மாவட்டத்தில் மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நாமக்கல், டிச. 13-நேற்று முன்தினம் இரவு முதல், தொடர்ந்து மழை பெய்து வந்ததால், நாமக்கல்லில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.நாமக்கல் மாவட்டத்தில், நேற்று முன்தினம் இரவில் இருந்து ஆங்காங்கே லேசானது முதல் கன மழை பெய்தது. நேற்று காலையிலும் மழை தொடர்ந்தது. கடைவீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செயல்படும், வர்த்தக நிறுவனங்களில் வாடிக்கையாளர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.ஆஞ்சநேயர், நரசிம்மர், அரங்கநாதர் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம், வழக்கத்தைவிட குறைந்திருந்தது. தொடர் மழையால், ஆஞ்சநேயர் சுவாமிக்கு வெண்ணெய் காப்பு அலங்காரம் ரத்து செய்யப்பட்டது. * ராசிபுரம் சுற்று வட்டார பகுதியில், நேற்று முன்தினம் குளிர் அதிகம் இருந்தது. நேற்று அதிகாலை முதல் ராசிபுரம், புதுப்பாளையம், முத்துக்காளிப்பட்டி, கவுண்டம்பாளையம், குருசாமிபாளையம், காக்காவேரி, சீராப்பள்ளி, நாமகிரிப்பேட்டை, மங்களபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ராசிபுரத்தில் இருந்து, ஆத்துார் செல்லும் சாலையின் இரு பக்கமும் மழைநீர் குட்டைபோல் தேங்கி நின்றது. எப்போதும் மக்கள் நடமாட்டம், போக்குவரத்து நெரிசல் இருக்கும் ராசிபுரம் கடைவீதி, சேலம் சாலை ஆகியவை மழையால் வெறிச்சோடி காணப்பட்டது. மழையால் கட்டுமான பணி, வேளாண் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.* குமாரபாளையத்தில், நேற்று தொடர் மழை பெய்ததால், வியாபாரிகள் வியாபாரம் இன்றி பாதிக்கப்பட்டனர். சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. கோம்பு பள்ளத்தில் அதிகளவில் மழை நீர் சென்றது. குழந்தைகள், பெரியவர்கள் குளிருக்கு சிரமப்பட்டனர். சாயம் போட்ட நுால்களை, காய வைக்க முடியாததால் தொழிலாளர்கள் தவித்தனர்.பள்ளி மாணவியர் அவதிநாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு, பல இடங்களில் மழை பெய்தது. நாமக்கல்லில் 6 மி.மீ., மங்களபுரத்தில், 2.80, சேந்தமங்கலம், புதுச்சத்திரத்தில் தலா, 1, கொல்லிமலையில், 2, என மொத்தம், 14.80 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. மேலும் பல இடங்களில் லேசான மழை பெய்தது. நாமக்கல் மாவட்டத்தில் விடுமுறை அளிக்கப்படாததால், மாணவ, மாணவியர் மழையில் நனைந்தவாறு பள்ளிகளுக்கு சென்று, அரையாண்டு தேர்வு எழுதினர்.* பள்ளிப்பாளையம் சுற்று வட்டாரத்தில் நேற்று காலை முதல் மழை பெய்தது. தள்ளுவண்டி மற்றும் நடைபாதை வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். சாலை மற்றும் குடியிருப்பு பகுதியில் மழைநீர் தேங்கி நின்றது. காவிரி பஸ் ஸ்டாப் பகுதியில் இருந்து புதுப்பாளையம் செல்லும் சாலை சேறும், சகதியுமாக மாறியது.* வெண்ணந்துார், அத்தனுார், அளவாய்ப்பட்டி, மின்னக்கல், நடுப்பட்டி, நாச்சிப்பட்டி, தேங்கல்பாளையம், ஆர்.புதுப்பாளையம், கல்லாங்குளம், கட்டனாச்சம்பட்டி பகுதியில் கனமழை பெய்து வருகிறது. சாலையில் தேங்கியுள்ள மழை நீரால், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். மேலும், குளிர்ந்த காற்று வீசி வருவதால் பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ, மாணவியர், அரசு அலுவலர்கள், கூலி வேலை செல்வோர் அவதியடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை