பிளஸ் 2 அக்கவுண்டன்சி தேர்வில் கால்குலேட்டர் அனுமதிக்க கோரிக்கை
நாமக்கல் :'பிளஸ் 2 அக்கவுண்டன்சி பொதுத்தேர்வில், கால்குலேட்டர்கள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்' என, நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் ராமு மற்றும் நிர்வாகிகள், தமிழக பள்ளி கல்வித்தேர்வுகள் துறை இயக்குனர் சசிகலாவை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது:தமிழக அரசு பள்ளி கல்வித்துறை அரசுத்தேர்வுகள் இயக்ககம் வழிகாட்டலில், பிளஸ் 2 பொதுத்தேர்வு வரும், மார்ச் மாதம் நடக்கிறது. பிளஸ் 2 பொதுத்தேர்வில், கலைப்பிரிவில் பயிலும் மாணவர்களுக்கு, பொருளியல் தேர்வுக்கு இயல்பான கால்குலேட்டர் பயன்படுத்த அரசு தேர்வுகள் இயக்ககம் ஏற்கனவே அனுமதி அளித்துள்ளது.இதேபோல், நடப்பாண்டில் கணக்குப்பதிவியல் (அக்கவுண்டன்சி) பாடத்திற்கும், இயல்பான கால்குலேட்டர் பயன்படுத்த அனுமதி அளிக்க வேண்டும். இதன் மூலம், கலை பிரிவுகளில் பயிலும் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரிக்கும். இதனால் அதிகமான கலைப் பிரிவு மாணவ, மாணவியர் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று, உயர்கல்வி பயில இது பெரிதும் உறுதுணையாக இருக்கும். 2026 மார்ச்சில் நடக்கும், பிளஸ் 2 பொதுத்தேர்வில் கணக்குப் பதிவியல் பாடத்தேர்வுக்கு இயல்பான கால்குலேட்டரை பயன்படுத்த அனுமதி வழங்கவேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.