மாணவர்கள் தொடங்கும் நிறுவனங்களுக்கு ரூ.19.50 கோடி ஒதுக்கீடு: கலெக்டர் தகவல்
நாமக்கல், ''மாணவர்கள் தொடங்கப்படும் தொழில் நிறுவனங்களுக்கு, 19.50 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்,'' என, கலெக்டர் துர்காமூர்த்தி தெரிவித்தார். தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில், 'நிமிர்ந்து நில்' என்ற உயர்கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள் சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் கருத்தரங்கு, நேற்று நாமக்கல்லில் நடந்தது. கலெக்டர் துர்காமூர்த்தி கலந்துகொண்டு பேசியதாவது: தமிழகத்தில், இளைஞர்களிடையே புத்தாக்கம் மற்றும் தொழில் முனைவோருக்கான சிந்தனைகளை ஊக்குவிக்க, 'நிமிர்ந்து நில்' என்ற தமிழ்நாடு இளைஞர் புத்தாக்கம் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம், கடந்த ஜூலை மாதத்தில் அண்ணா பல்கலையில் தொடங்கப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திலும், சில உயர் கல்வி நிறுவனங்கள் மாவட்ட மையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.மாவட்ட மையமாக தேர்வு செய்யப்பட்டுள்ள உயர்கல்வி நிறுவனங்கள், 'நிமிர்ந்து நில்' திட்டத்தை செயல்படுத்துவார்கள். மற்ற உயர் கல்வி நிறுவனங்கள் உறுப்பு கல்லுாரிகளாக செயல்படுவர். நாமக்கல் மாவட்டத்தில், அழகப்பா பல்கலை மைய கல்லுாரி ஆக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.'நிமிர்ந்து நில்' என்ற திட்டம், மாணவர்களுடைய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் செயல்படுத்தப்படும். மாணவர்கள் சமுதாயத்தில் அல்லது வேறு தொழில்களில் இருக்கக்கூடிய பிரச்னைகளை கண்டறிந்து அவற்றிற்கான தீர்வுகளை மாதிரி வடிவம் கொண்டு விளக்கும் பட்சத்தில், அந்த யோசனைகளுக்கு, ஒரு லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும். மாணவர்களுக்கு, 'ஐடியேசன் கேம்ப்' இரண்டு நாள் பயிற்சியும், 'பூட் கேம்ப்' என்று மூன்று நாள் பயிற்சியும் வழங்கப்படும். இறுதியாக சென்னையில் நடைபெறக்கூடிய இறுதி சுற்றில் வெற்றி பெறும், 30 பேருக்கு, தலா, ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும்.வெற்றி பெற்ற மாணவர்களை தொழில் முனைவோராக மாற்றுவதற்கான வளர் தொழில் மையங்களோடு அவர்களுக்கு இணைப்பு ஏற்படுத்தி வசதிகள் செய்து தரப்படும்.மாணவர்கள் தொடங்கப்படும் நிறுவனங்களுக்கு, 19.57 கோடி ரூபாய், 9,000 இளைஞர்களுக்கான தொழில்நுட்ப பயிற்சிக்கு, 2 கோடி ரூபாய் என மொத்த நிதியாக ஒதுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.