100 நாள் வேலை திட்டத்தில் மோசடி கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்
100 நாள் வேலை திட்டத்தில் மோசடிகவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்நாமகிரிப்பேட்டை, அக். 10-நாமகிரிப்பேட்டை யூனியனில், 100 நாள் வேலை திட்டத்தில் மோசடி செய்த ஊழியரை பணி நீக்கம் செய்யக்கோரி, கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.நாமகிரிப்பேட்டை யூனியனுக்குட்பட்ட நாவல்பட்டி பஞ்.,ல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில், பணிதள பொறுப்பாளராக பேபி, 45, என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் மோசடி செய்ததாக, கடந்த இரு மாதங்களுக்கு முன் புகார் எழுந்தது. இதையடுத்து அப்போது நடந்த ஊராட்சி மன்ற கூட்டத்தில், பணிதள பொறுப்பாளர் பணியில் இருந்து பணியிடை நீக்கம் செய்வதாக மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இதுவரை பேபி பணிதள பொறுப்பாளராக வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து, நேற்று ஊராட்சி மன்ற கூட்டம் நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. கூட்டத்திற்கு வந்த உறுப்பினர்கள் நவீன் உள்ளிட்ட, 3 பேர் அலுவலகத்திற்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள், பணிதள பொறுப்பாளரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்ற பதாகையுடன் உட்கார்ந்திருந்தனர். நாமகிரிப்பேட்டை ஏ.பி.டி.ஓ., கிருபாகரன், கவுன்சிலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.இதுகுறித்து, நாவல்பட்டி ஊராட்சி, 5வது வார்டு கவுன்சிலர் நவீன் கூறியதாவது: கடந்த, இரு மாதங்களுக்கு முன் பணிதள பொறுப்பாளர் பேபி மோசடி செய்ததாக, ஊராட்சி மன்ற கூட்டத்தில் பணி நீக்கம் செய்ய தீர்மானம் நிறைவேற்றினோம். ஆனால், தற்போது வரை அப்பெண் பணியில் உள்ளார். அவரை பணியில் இருந்து நீக்கம் செய்யக்கோரி பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.