ஸ்பின்னிங் மில் ஊழியர்கள் மர்ம காய்ச்சலால் பாதிப்பு
வெண்ணந்துார்:நாமக்கல் மாவட்டம், வெண்ணந்துார் அருகே, ஆட்டையாம்பட்டி பிரிவு சாலை பகுதியில் தனியார் ஸ்பின்னிங் மில் செயல்படுகிறது. இதில், 600க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். பீஹார், ஒடிஷா உள்ளிட்ட வட மாநில தொழிலாளர்கள், தொழிற்சாலை வளாகத்தில் உள்ள குடியிருப்பில் தங்கி வேலை செய்கின்றனர். அதில், 15க்கும் மேற்பட்டோர் சில நாட்களாக மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். ராசிபுரம் தலைமை மருத்துவ அலுவலர் கலைச்செல்வி கூறுகையில், ''கடந்த மூன்று நாட்களாக தனியார் ஸ்பின்னிங் மில்லில், 16 தொழிலாளர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதில், அதிகளவு காய்ச்சல் இருந்த நான்கு பேர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். ஆய்வு முடிவுகள் வந்த பின் தான், என்ன காய்ச்சல் என்று தெரிய வரும்,'' என்றார்.