ஆங்கில ஆசிரியரை மாற்றக்கோரி வகுப்பை புறக்கணித்த மாணவியர்
மோகனுார்:'ஆங்கில ஆசிரியர் சரியாக பாடம் நடத்துவதில்லை' என புகார் கூறி அரசு உயர்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு மாணவியர், வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம் மோகனுார் எஸ்.வாழவந்தியில், அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பகிறது. இங்கு ஆறு முதல், பத்தாம் வகுப்பு வரை, 131 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். தமிழ், ஆங்கில வழியில் பாடம் நடத்தப்படுகிறது. பத்தாம் வகுப்பு தமிழ் வழியில், 22 பேர், ஆங்கில வழியில் எட்டு பேர் என, 30 பேர் படிக்கின்றனர். தலைமையாசிரியராக தங்கராசு பணி யாற்றுகிறார். ஆங்கில ஆசிரியராக நாகராஜ் உள்ளார். 'ஆங்கில ஆசிரியர் சரியாக பாடம் நடத்துவதில்லை; நடத்தினாலும் புரியவில்லை' என தலைமை ஆசிரியரிடம் மாணவர்கள் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் நேற்று காலை, 9:00 மணிக்கு பள்ளிக்கு வந்த பத்தாம் வகுப்பு மாணவியர், வகுப்புக்கு செல்லாமல், வெளியே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பரமத்தி போலீசார் மாணவியரிடம் விசாரணை நடத்தினர். மாணவியர் தரப்பில், 'ஆங்கில ஆசிரியர் பாடம் நடத்துவது புரியவில்லை. சரியாக வகுப்புக்கும் வருவதில்லை. மாற்று ஆசிரியர் வந்து பாடம் நடத்தினால், அவர் எதிர்ப்பு தெரிவிக்கிறார். வேறு ஆங்கில ஆசிரியரை நியமிக்க வேண்டும்' என்றனர். தலைமையாசிரியர் தங்கராசு கூறுகையில், ''இதுதொடர்பாக, அவரிடம் பலமுறை பேசிவிட்டேன். சிறப்பு வகுப்பு எடுக்க வலியுறுத்தினால், ஜி.ஓ., இருக்கா என கேட்கிறார்,'' என்றார். ஆங்கில ஆசிரியர் நாகராஜ் கூறுகையில், ''கடந்தாண்டு என் பாடத்தில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று விட்டனர். சில ஆசிரியர் துாண்டுதலால் என்மீது வீண் பழி சுமத்துகின்றனர்,'' என்றார். தகவலறிந்து மாவட்ட கல்வி அலுவலர் புரு சோத்தமன், பள்ளி துணை ஆய்வாளர் பெரியசாமியும், பள்ளிக்கு சென்று மாணவர்கள், ஆசிரியர், தலைமையாசிரியரிடம் விசாரணை நடத்தினர்.