உங்களை தேடி உங்கள் ஊரில் முகாம் ஆர்வம் காட்டாத மலை கிராம மக்கள்
சேந்தமங்கலம், ஏற்கனவே அளித்த கோரிக்கைகள் ஏதும் நிறைவேறாததால், கொல்லிமலையில் நேற்று நடந்த, 'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்ட முகாமில், அப்பகுதி மக்கள் ஆர்வம் காட்டாமல் புறக்கணிப்பு செய்ததாக புகார் எழுந்துள்ளது.நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை யூனியனில், 24 பஞ்.,கள் உள்ளன. இங்கு, 200க்கும் மேற்பட்ட மலைகிராமங்கள் உள்ளன. இங்குள்ள மக்கள், தாங்கள் வசிக்கும் மலை கிராமத்திற்கு சாலை வசதி, இலவச வீட்டுமனை பட்டா, பள்ளி மாணவர்களுக்கு உரிய நேரத்தில் பஸ் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி தருமாறு, கலெக்டர் அலுவலகத்திலும், கொல்லிமலையில் நடந்த குறைதீர் கூட்டங்களில், ஏராளமான மனுக்கள் அளித்துள்ளனர்.ஆனால், மாவட்ட நிர்வாகம், இந்த மனுக்களுக்கு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், அதிகாரிகள், பெயரளவிற்கு கூட்டத்தை நடத்திவிட்டு செல்கின்றனர் என்றும், இதனால், நேற்று நடந்த, 'ஊங்களை தேடி உங்கள் ஊரில்' திட்ட முகாமில் கலந்துகொள்ள ஆர்வம் காட்டாமல் புறக்கணித்ததாக, அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.இதுகுறித்து, ஆரியூர் பஞ்., முன்னாள் தலைவர் நாகலிங்கம் கூறியதாவது: கொல்லிமலையில், மூன்று முறை குறைதீர்க்கும் கூட்டம், மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் உள்ளிட்ட பல்வேறு முகாம்கள் நடந்தன. இந்த முகாம்களில், ஒவ்வெரு பஞ்.,லும் வீடுகள் இல்லாத மக்கள், வீடு கேட்டும், பள்ளி மாணவர்களுக்கு உரிய நேரத்தில் சென்றுவர பஸ் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டும் பலமுறை மனு கொடுத்தேம். ஆனால், இதுவரை இந்த மனுக்களுக்கு தீர்வு ஏற்படவில்லை. இதனால், எங்கள் பஞ்.,ல் இருந்து, நேற்று நடந்த, 'ஊங்களை தேடி உங்கள் ஊரில்' திட்ட முகாமில், யாரும் மனுக்கள் கொடுக்கவில்லை. இது அனைத்தும் பெயரளவிற்கு மட்டுமே நடக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.