குண்டுமல்லி பூ விலை ஒரே நாளில் ரூ.100 சரிவு
ப.வேலுார், ப.வேலுார் தாலுகாவுக்குட்பட்ட சாணார்பாளையம், ப.வேலுார், பரமத்தி, மோகனுார், உன்னியூர், கரூர் மாவட்டம், சேமங்கி, வேட்டமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் குண்டுமல்லி, முல்லை, சம்பங்கி, சாமந்தி, அரளி பூக்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது.இவற்றை விவசாயிகள் அறுவடை செய்து, ப.வேலுாரில் உள்ள பூ உற்பத்தியாளர்கள் சங்கத்திற்கு தினமும் கொண்டு வந்து ஏலத்தில் விற்பனை செய்கின்றனர்.சில வாரங்களாக பூ விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது. தற்போது, பூக்கள் விளைச்சல் அதிகரிப்பால், ப.வேலுாரில் உள்ள பூ உற்பத்தியாளர் சங்கத்திற்கு, நேற்று பூக்கள் வரத்து அதிகமானது.ப.வேலுாரில் உள்ள பூ உற்பத்தியாளர் சங்கத்தில், நேற்று நடந்த ஏலத்தில், நேற்று முன்தினம், 400 ரூபாய்க்கு விற்ற ஒருகிலோ குண்டுமல்லி, 300 ரூபாய்; 200 ரூபாய்க்கு விற்ற சம்பங்கி, 120 ரூபாய்; 500 ரூபாய்க்கு விற்ற முல்லை, 350 ரூபாய்; 240 ரூபாய்க்கு விற்ற அரளி, 80 ரூபாய்; 300 ரூபாய்க்கு விற்ற சாமந்தி, 150 ரூபாய்க்கு விற்பனையாகின.நேற்று ஆடி வெள்ளியையொட்டி, நேற்று முன்தினம் பூக்கள் விற்பனை அதிகரித்தது. அதே நேரத்தில், நேற்று பூக்கள் வரத்து அதிகமானதால், தேவை குறைந்து பூக்களின் விலை சரிந்தது.