புகையிலை பொருட்கள் பயன்படுத்தினால் உங்களின் எதிர்கால திட்டம் பாழாகும்
நாமக்கல், ''புகையிலை பொருட்களை பயன்படுத்தினால், உங்கள் இலக்குகள், சாதனைகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் பாழாகும்,'' என, விழிப்புணர்வு நிகழ்ச்சியில், கலெக்டர் துர்கா மூர்த்தி பேசினார்.நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவ கல்லுாரி வளாகத்தில், மாவட்ட அளவில் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியருக்கான போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் துர்கா மூர்த்தி தலைமை வகித்து பேசியதாவது:உலகளாவிய வயது வந்தோர் புகையிலை கணக்கெடுப்புபடி, 42 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் புகையிலை பொருட்களை பயன்படுத்துகின்றனர். தற்போது, பள்ளி, கல்லுாரி மாணவர்கள், 'கூல் லிப்' என்ற குறிப்பிட்ட புகையிலை தயாரிப்பை பயன்படுத்துகின்றனர். இளம் வயதிலேயே புகையிலையை பயன்படுத்துவது மிகவும் தீங்கு விளைவிக்கும். புற்றுநோய், இதய நோய், நுரையீரல் கோளாறுகள் போன்ற நீண்டகால உடல்நல பிரச்னைகளை ஏற்படுத்தும்.கூல்லிப், ஹான்ஸ் போன்ற புகையிலை பொருட்களையும், தடைசெய்யப்பட்ட பிற பொருட்களையும் ஒருபோதும் பயன்படுத்த வேண்டாம். அவை, உங்கள் இலக்குகள், சாதனைகள் மற்றும் எதிர்கால திட்டங்களை பாழாக்கும். நீங்கள் நம் தேசத்தின் துாண்கள். உங்கள் சமூகத்தை பாதுகாப்பதில் பெருமை கொள்ளுங்கள்.இவ்வாறு அவர் பேசினார்.தொடர்ந்து, கலெக்டர் தலைமையில், போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியை அனைவரும் ஏற்றுக்கொண்டனர். மேலும், போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்.நாமக்கல் எஸ்.பி., விமலா, சார்பு நீதிபதி வேலுமயில், கலால் உதவி ஆணையர் ராஜேஸ்குமார், கல்லுாரி கல்வி இயக்ககம், தர்மபுரி மண்டல இணை இயக்குனர் ராமலட்சுமி, முதன்மை கல்வி அலுவலர் எழிலரசி, அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.