தறிப்பட்டறையை காலி செய்ய மறுத்த பெண்ணின் வீடு சூறை
குமாரபாளையம், குமாரபாளையத்தில், தறிப்பட்டறையை காலி செய்ய மறுத்த பெண்ணின் வீடு சூறையாடப்பட்டது.நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை சேர்ந்தவர் தர்மலிங்கம், 55. இவரது மனைவி ராணி, 50. இவர்கள், குமாரபாளையம் ஆலங்காட்டு வலசு பகுதியில் தனியார் ஒருவருக்கு சொந்தமான தறி பட்டறையை, லீசுக்கு எடுத்து இரண்டு மகன், மருமகள், பேரக் குழந்தையுடன் தங்கியிருந்து தொழில் நடத்தி வருகிறார்.இந்நிலையில் ஓராண்டுக்கு முன்பு, தர்மலிங்கத்தின் இரண்டாவது மகன் அருண்குமார், 27, ஒட்டன்கோயில் பகுதியில் உள்ள தறி பட்டறையில் வேலைக்கு சேர்ந்து, அங்கு பணிபுரிந்து வந்தார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு, அருண்குமார் வேலை செய்து கொண்டிருந்தபோது, மின்சாரம் பாய்ந்து இறந்துள்ளார். இதையடுத்து அருண்குமார் மனைவி புவனேஸ்வரி, தனிப்பட்டறை உரிமையாளர் மீது நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.புவனேஸ்வரியிடம் வழக்கை வாபஸ் வாங்க கோரி உரிமையாளர் கூற, அதற்கு அவர் சம்மதிக்காததால், தறி பட்டறையை காலி செய்யச்சொல்லி கூறியுள்ளார். புவனேஸ்வரி குடும்பத்தினர் முதல்வர் தனிப்பிரிவு, மாவட்ட கலெக்டர், எஸ்.பி., ஆகியோரிடம் மனு அளித்தனர். இதை பொறுத்துக் கொள்ள முடியாத நிலையில், லீசுக்கு எடுத்து நடத்தி வரும் தறி பட்டறைக்கு, உரிமையாளர் தரப்பில் சந்திரசேகர், ரவி, மேகலா, வசந்தி, சாந்தி, சித்ரா, நித்தீஸ், சீனிவாசன் உள்பட சிலர் கும்பலாக வந்தனர்.தர்மலிங்கத்தின் குடும்பத்தினர் இல்லாததால், வீட்டின் பூட்டை உடைத்து பொருட்களையும், ஓடுகளையும் கழற்றி வீசினர். புவனேஸ்வரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்க முயன்றார். மொபைல்போனை பிடுங்கிக் கொண்டு, கொலை மிரட்டல் விடுத்து, அங்கிருந்து கும்பல் தப்பியது. குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் புவனேஸ்வரி சிகிச்சை பெற்று வருகிறார்.தறிப்பட்டறையை காலி செய்யச் சொல்லியும், கணவன் இறப்புக்கு நஷ்ட ஈடு கேட்டு தாக்கல் செய்த வழக்கை வாபஸ் பெற வேண்டியும், வீடுகளை சேதப்படுத்தியதாக, தறிபட்டறை உரிமையாளர் மீது புவனேஸ்வரி தரப்பினரும், வாடகை கேட்க போகும் போது, புவனேஸ்வரி தரப்பினர் தாக்குதல் நடத்தியதாக, தறிப்பட்டறை உரிமையாளர் தரப்பினரும் புகார் கொடுத்ததால், இரு தரப்பினர் மீதும், குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிந்து, விசாரணை செய்து வருகின்றனர்.