உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / விபத்தில்லா சமுதாயம் உருவாக மாணவர்களின் பங்கு முக்கியம் :என்.சி.சி., பயிற்சி முகாமில் தெளிவு

விபத்தில்லா சமுதாயம் உருவாக மாணவர்களின் பங்கு முக்கியம் :என்.சி.சி., பயிற்சி முகாமில் தெளிவு

குன்னூர் : 'விபத்தில்லாத சமுதாயத்தை உருவாக்க மாணவ சமுதாயத்தால் தான் முடியும்,' என அறிவுறுத்தப்பட்டது.நீலகிரி மாவட்ட என்.சி.சி., சார்பில் சீனியர், ஜூனியர் பிரிவு மாணவ, மாணவியருக்கான பயிற்சி முகாம் குன்னூர் புனித அந்தோணியார் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் துவங்கியது. போக்குவரத்து விதிமுறை, சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வழங்கும் நிகழ்ச்சி துவங்கியது. லெப்டினென்ட் கர்னல். சுஷில் குமார் துவக்கி வைத்தார்.குன்னூர் போக்குவரத்து எஸ்.ஐ., ஆனந்தன் பேசுகையில், ''வாகனம் ஓட்டுவதில் பெருமளவு மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். பள்ளி, கல்லூரிகளுக்கு இரு சக்கர வாகனத்தில் வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகம். இரு சக்கர வாகனம் ஓட்டும் உரிமம் பெற 18 வயதும், கார், ஆட்டோ உட்பட இலகு ரக வாகனம் ஓட்டும் உரிமம் பெற 21 வயதும் நிரம்பியிருக்க வேண்டும். போக்குவரத்து விதிமுறையை நன்கு தெரிந்து, வாகனம் ஓட்ட வேண்டும். ஹெல்மட் அணிவது, வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பு. மொபைல் போனில் பேசியபடி வாகனம் ஓட்டக் கூடாது,'' என்றார்.போக்குவரத்து தலைமை காவலர் போஜராஜன், செய்முறை விளக்கம் அளித்தார். போக்குவரத்து முதன்மை வார்டன் லட்சுமி நாராயணன், சாலையில் உள்ள போக்குவரத்து சிக்னல்களை விளக்கி பேசுகையில், ''போக்குவரத்து விதி, சாலை விதிகளை மதிக்காமல் வாகனங்களை ஓட்டுவது தான் விபத்துக்கு முக்கிய காரணம். விதிகளை நன்கு புரிந்து கொள்வதன் மூலம் விபத்துகளை தவிர்க்க முடியும். பொறுப்புள்ள மாணவ சமுதாயம் தான் இந்த பணியை மேற்கொள்ள வேண்டும். விபத்தில்லா சமுதாயத்தை உருவாக்க மாணவ சமுதாயத்தால் தான் முடியும்,'' என்றார். மாணவ, மாணவிகள் மேடைக்கு வரவழைத்து செய்முறை பயிற்சி வழங்கப்பட்டது.என்.சி.சி., முதன்மை அலுவலர் மார்ட்டின், முதல் நிலை அலுவலர் ராஜூ, 2ம் நிலை அலுவலர் ஜெயமணி, 3ம் நிலை அலுவலர் சுகந்தி, அட்ஜூடன்ட் ராஜேந்திரன், ராணுவ உயரதிகாரிகள் பங்கேற்றனர். ஈரோடு, மேட்டுப்பாளையம், ஊட்டி அரசு கலைக்கல்லூரி, சாம்ராஜ், கூடலூர், நஞ்சநாடு, குன்னூர் புனித அந்தோணியார் பள்ளி உட்பட பல பள்ளிகளில் இருந்து 600 மணவ, மாணவிகள் பங்கேற்று, பயன்பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ