உழவர் சந்தையை மூடினால் சாகும் வரை உண்ணாவிரதம்
ஊட்டி : நீலகிரி மாவட்ட தி.மு.க., இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் கூட்டம் ஊட்டியில் நடந்தது. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் முஸ்தபா வரவேற்றார். கூட்டத்தில், மீண்டும் குல கல்வி திட்டத்தை கொண்டு வரும் முயற்சியாக அ.தி.மு.க., அரசு சமச்சீர் கல்வியினை தடை செய்வதை கண்டிப்பது; தமிழகம் முழுவதும் தி.மு.க., நிர்வாகிகள், முன்னோடிகளை அச்சுறுத்தும் வண்ணம் காவல் துறையினரை ஏவிவிட்டு, பொய் வழக்கு போட முனைவதை வன்மையாக கண்டிப்பது. இந்த வழக்குகளை ஒன்றிணைந்து நீதிமன்றத்தில் நேர்கொள்வது; நீலகிரி மாவட்டத்தில் உழவர் சந்தைகளை மூடிவிட நடவடிக்கை எடுக்கும் அரசுக்கு கண்டனம்; அவ்வாறு நடந்தால், சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குன்னூர் எம்.எல்.ஏ.,வும், மாவட்ட கழக செயலாளருமான ராமச்சந்திரன் தலைமை வகித்தார். கூடலூர் எம்.எல்.ஏ., திராவிடமணி, மாவட்ட துணை செயலாளர் நாசர்அலி, நகர செயலாளர் லியாக அலி உட்பட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர். மாவட்ட துணை அமைப்பாளர் மூர்த்தி நன்றி கூறினார்.