| ADDED : ஏப் 11, 2024 07:14 AM
ஊட்டி : நீலகிரி லோக்சபா தொகுதி, 'ஊட்டி, குன்னுார், கூடலுார், மேட்டுப்பாளையம், அவிநாசி, பவானிசாகர்,' ஆகிய, 6 தொகுதிகளை உள்ளடக்கியதாகும்.தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் அந்தந்த தொகுதிகளில், 72 தேர்தல் பறக்கும் படையினர் அமைக்கப்பட்டு, தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மூன்று வாரங்களுக்கு மேலாக மேற்கொள்ளப்பட்ட வாகன சோதனையில், உரிய ஆவணங்கள் இன்றியும், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் கொண்டு வந்ததாக, தேர்தல் பறக்கும் படையினரால், 3.66 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.பறிமுதல் செய்யப்பட்ட பணம் மாவட்ட தேர்தல் பிரிவில் அமைக்கப்பட்ட கருவூல அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இதில், உரிய ஆவணங்கள் சமர்பிக்கப்பட்ட நபர்களுக்கு, நேற்றைய நிலவரப்படி, 2.17 கோடி ரூபாய் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.தேர்தல் நெருங்கி வருவதால் பணம் மற்றும் பொருட்கள் எடுத்து வர வாய்ப்பு இருப்பதால் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள்; போலீசார் வாகன சோதனையை தீவிர படுத்தியுள்ளனர்.