மேட்டுப்பாளையம், - மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் ஆடிக் குண்டம் விழா, இம்மாதம், 30ம் தேதி நடைபெற உள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில், மிகவும் பிரசித்தி பெற்றது, மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலாகும். இது ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்டதாகும். இக்கோவிலில் ஆடிக்குண்டம் விழா, வெகு விமரிசையாக நடைபெறும்.இந்த ஆண்டு, 31ம் ஆண்டு ஆடிக்குண்டம் திருவிழா, இம்மாதம், 23ம் தேதி பூச்சாட்டுடன் துவங்க உள்ளது. 26ம் தேதி லட்சார்ச்சனையும், 27ல் கிராம சாந்தியும், 28ல் கொடியேற்றம், 29ல் பொங்கல் வைத்து குண்டம் திறப்பும், 30ம் தேதி காலை குண்டம் இறங்குதல் ஆகிய விழாக்கள் நடைபெற உள்ளன. 31ம் தேதி மாவிளக்கும், அம்மன் திருவீதி உலாவும், ஆகஸ்ட் 1ம் தேதி பரிவேட்டை, வாணவேடிக்கையும், 2ம் தேதி மகா அபிஷேகம், 3ம் தேதி ஆடிப்பெருக்கு, 4ம் தேதி ஆடி அமாவாசையும், 5ம் தேதி, 108 திருவிளக்கு பூஜையும், 6ம் தேதி மறு பூஜையும் நடைபெற உள்ளது. ஆடிக்குண்டம் திருவிழாவை முன்னிட்டு, வனபத்ரகாளியம்மன் கோவிலில், அரசு துறை அதிகாரிகள் சார்ந்த ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. கோவை வடக்கு ஆர்.டி.ஓ., கோவிந்தன் தலைமை வகித்தார். கோவில் உதவி கமிஷனர் கைலாசமூர்த்தி வரவேற்றார். கோவிலில், திருவிழாவை முன்னிட்டு, புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும். கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தி, பக்தர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். கோவிலுக்கு வரும் சாலையை, நெடுஞ்சாலைத்துறை சீரமைக்க வேண்டும். அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில், திருவிழா முடியும் வரை சிறப்பு பஸ்களை இயக்க வேண்டும். மின்சார வாரியம் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும். தேக்கம்பட்டி ஊராட்சி நிர்வாகம் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதி செய்ய வேண்டும். அரசு பொது சுகாதாரத்துறை சார்பில், சிறப்பு மருத்துவ முகாம் அமைத்து, குண்டம் இறங்கும் பக்தர்களுக்கும், தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும். பில்லூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது, தகவல் தெரிவிக்க வேண்டும். யானைகள் நடமாட்டம் உள்ளதால், இரவில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும், உட்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் எம்.எல்.ஏ., செல்வராஜ், காரமடை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் உள்பட பல்வேறு துறை அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.