இளம் வயது திருமணம் தடுக்க விழிப்புணர்வு। நிகழ்ச்சி பழங்குடியின பெற்றோருக்கு அறிவுரை
பந்தலுார்: 'பழங்குடியின பெற்றோர் இளம் வயது திருமணங்களை தடுப்பதற்கான முயற்சி மேற்கொள்ள வேண்டும்,' என, அறிவுறுத்தப்பட்டது.நீலகிரி ஆதிவாசிகள் நலச்சங்கம், 'சைல்டு பண்ட்' நிறுவன குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மூலம், பழங்குடியின பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் மீறல்கள் மற்றும் பராமரிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, போத்துக்கொல்லி, மங்கரை, திருமங்கலம் உள்ளிட்ட பழங்குடியினர் கிராமங்களில்நடந்தது.ஒருங்கிணைப்பாளர் நீலகண்டன் வரவேற்றார். டாக்டர் கருப்பசாமி பேசுகையில்,''பெண் குழந்தைகள் பாதுகாப்பில் பெற்றோர் கவனம் செலுத்த வேண்டும். கர்ப்பம் தரிப்பதற்கு ஏற்ற, 21 வயதில் திருமணம் செய்து கொடுப்பதும் அவசியம். அதேபோல் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து, நோய்களுக்கு ஏற்ப மருந்துகள் உட்கொள்வதும் அவசியம்,''என்றார்.திட்ட மேலாளர் அபிலாஷ் குமார் பேசுகையில், ''பழங்குடியின மக்கள் கூச்ச சுபாவத்தை போக்கி, கேள்வி கேட்கும் நிலைக்கு தங்களை உயர்த்திக் கொள்ள வேண்டும். அரசு வழங்கும் திட்டங்களை முறையாக பெறுவதற்கு கல்வி முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர்ந்து, பழங்குடியின குழந்தைகளை பள்ளிகளில் சேர்ப்பதற்கு முன்வர வேண்டும்,'' என்றார்.திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயா பேசுகையில், ''சிறுவயது திருமணத்தால் தாய் மற்றும் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படும். இதை உணர்ந்து இளம் வயது திருமணத்தை தடுப்பதிலும், பெண் குழந்தைகளின் உடல் நலத்தை பாதுகாப்பதிலும் முக்கியத்துவம் செலுத்த வேண்டும். அதேபோல் குழந்தைகளை வேலைக்கு அனுப்புவதை தவிர்த்து, பள்ளிகளுக்கு அனுப்பி, அவர்களுக்கான கல்வி உரிமை சட்டத்தை வழங்கவும் முன் வரவேண்டும்,'' என்றார்.