டேவிஸ் பூங்காவை பறவைகள் பூங்காவாக மாற்ற முடிவு
ஊட்டி; ஊட்டி டேவிஸ் பூங்காவை பறவைகள் பூங்காவாக மாற்ற நகராட்சி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.ஊட்டி நகராட்சியின் முதல் கமிஷனர் பெயரில், கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள டேவிஸ் பூங்கா அமைந்துள்ளது.போதிய விளம்பரம் இல்லாத நிலையில், கோடை சீசனில் சொற்ப எண்ணிக்கையில், உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பூங்காவுக்கு வந்து செல்கின்றனர். பூங்காவில், பல்வேறு அரிய மரங்களுடன், குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் உள்ளன. இருப்பினும், பார்வையாளர்களின் கூட்டம் குறைந்து வருகிறது.'இந்த பூங்காவை, பறவைகள் பூங்காவாக மாற்ற வேண்டும்,' என, உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அதன்படி, சமீபத்தில் நகராட்சி மன்ற கூட்டத்தில், பூங்காவை பறவை பூங்காவாக மாற்ற வலியுறுத்தப்பட்டுள்ளது. நகராட்சியின் இந்த நடவடிக்கை, உள்ளூர் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.