எளிதாக சம்பாதிக்கும் கல்வியால் அறிவியல் ஆய்வுகள் குறைகிறது
குன்னுார்; குன்னுார் அருகே கோடேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில், தேசிய அறிவியல் தின நிகழ்ச்சி நடந்தது. தலைமையாசிரியை செலின் தலைமை வகித்தார். ஆசிரியை தனலட்சுமி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் மனோகரன் பேசியதாவது:விக்சித் பாரதத்திற்கான அறிவியல் மற்றும் புத்தாக்கத்தில் 'உலகளாவிய தலைமைத்துவத்திற்கான இந்திய இளைஞர்களை மேம்படுத்துதல்' என்ற தலைப்பின் கீழ் இந்த ஆண்டு அறிவியல் தினம் கொண்டாடப்படுகிறது. குழந்தைகளிடம் அறிவியல் கற்கும் ஆர்வத்தை உண்டாக்க பல திட்டங்கள் செயல்படுத்தினாலும், மாணவர்கள் எளிதாக பணம் சம்பாதிக்கும் கல்வியை நாடுவதால், அறிவியல் ஆய்வுகள் குறைந்து வருகிறது. இந்த நுாற்றாண்டில் ஏற்பட்டுள்ள அறிவியல் வளர்ச்சி, மக்களின் வாழ்க்கைத்தரம் உயர காரணமாகும். இயற்கை பேரிடர்களை துல்லியமாக கணித்தல் மூலமாக இழப்புகள் தடுக்க பயன் கிடைக்கிறது. அறிவியல் பூர்வமாக அனைத்தையும் பகுத்து அறிந்து கொள்ள அறிவியல் மனோபாவத்தை வளர்த்து கொள்வது அவசியம். எதையும் ஆராய்ந்து முடிவெடுக்கும் சிந்தனை அன்றாட வாழ்விலும் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். ஆசிரியை ஜெயந்தி மாலா நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். ஆசிரியை அமராவதி நன்றி கூறினார்.