பாண்டியார் -- புன்னம்புழா நீர் வீழ்ச்சி சுற்றுலா தலமாக மாற்ற எதிர்பார்ப்பு
கூடலுார்;கூடலுார் இரும்புபாலம் அருகே உள்ளூர் மக்களை கவர்ந்து வரும், பாண்டியார்-புன்னம்புழா ஆற்றின், நீர்வீழ்ச்சியை சுற்றுலா தலமாக மாற்ற வலியுறுத்தி உள்ளனர்.கூடலுாரில் உற்பத்தியாகும் பாண்டியார் - -புன்னம்புழா ஆறு, கீழ்நாடுகாணி வழியாக, தமிழகம், கேரள எல்லையை கடந்து மலப்புரம் மாவட்டத்தில் சாளியார் ஆற்றில் இணைகிறது. முக்கியத்துவம் வாய்ந்த பாண்டியார் -- புன்னம்புழா ஆற்றில், இரும்புபாலம் அருகே உள்ள, நீர்வீழ்ச்சியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவது வழக்கம்.தற்போது, பருவமழை தீவிரமடைந்த நிலையில் நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் அழகை உள்ளூர் மக்கள், ஆர்வத்துடன் ரசித்து வருகின்றனர். அங்கு எந்த பாதுகாப்பு வசதியும் இல்லாததால், அவர்கள் ஆபத்தில் சிக்கும் சுழல் உள்ளது. இப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கான வசதி இல்லாததால், அழகான நீர்வீழ்ச்சி அவர்களால் ரசித்து செல்ல முடியாத சூழலும் உள்ளது.மக்கள் கூறுகையில், 'ஆண்டு முழுவதும் ரசிக்க கூடிய இந்த நீர்வீழ்ச்சி சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் வசதியை ஏற்படுத்தினால், இப்பகுதி சுற்றுலா தலமாக மாற்றுவதன் வாயிலாக பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் வாய்ப்புள்ளது. இதற்கான நடவடிக்கை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும்,' என்றனர்.