உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஊட்டி- - குன்னுார் லோக்கல் பஸ்கள் குறைப்பு; கடும் சிரமத்தில் உள்ளூர் பயணிகள்

ஊட்டி- - குன்னுார் லோக்கல் பஸ்கள் குறைப்பு; கடும் சிரமத்தில் உள்ளூர் பயணிகள்

குன்னுார் : குன்னுார் - ஊட்டிக்கு அரசு பஸ்கள் குறைவாக இயக்குவதுடன், பழுதடைந்த ஓரிரு பஸ்களை மட்டும் இயக்குவதால் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.'குன்னுார் - ஊட்டி இடையே, 10 நிமிடங்களுக்கு ஒரு முறை பஸ் இயக்கப்படும்,' என்ற அறிவிப்பு உள்ளது. ஆனால், சமீப காலமாக அரை மணி நேரத்தில் இருந்து ஒன்றரை மணி நேரத்திற்கு ஒருமுறை மட்டுமே அரசு பஸ் இயக்கப்படுகிறது.குறிப்பாக மாலை, 6:45 மணியிலிருந்து இரவு 8:15 மணி வரை அரசு பஸ்கள் இயக்கப்படுவதில்லை. இதனால், பயணிகள் 'லெவல் கிராசிங்' பகுதிக்கு சென்று மேட்டுப் பாளையம், கோவை உள்ளிட்ட சமவெளி பகுதிகளில் இருந்து வரும் பஸ்களில் நெரிசலில் பயணம் செய்கின்றனர்.மேலும், ஊட்டியில் இருந்து குன்னுாருக்கு ரயிலில் வரும் சுற்றுலா பயணிகளும் நீண்ட நேரம் காத்திருந்து குழந்தைகளுடன் தொங்கியவாறு கூட்ட நெரிசலில் சிரமத்துடன் பயணம் செய்கின்றனர்.இந்த பஸ்கள் பிக்கட்டி, காணிக்கராஜ் நகர், ஆர்.கே.எஸ்., உள்ளிட்ட பகுதிகளில் பஸ் நிறுத்தப்படாது என கூறி பயணிகளை ஏற்றி செல்வதில்லை. இதனால், பணி முடித்து செல்லும் மகளிரும் எல்லநள்ளியில் இருந்து வீட்டிற்கு நடந்தே செல்கின்றனர்.கோர்ட் உத்தரவு பிறப்பித்த குறைந்தபட்ச கட்டணம், 7 ரூபாய் உள்ள நிலையில், இந்த பஸ்களில் முறைகேடாக, 11 ரூபாய் வசூலித்து பயணிகளை அழைத்து செல்லும் அவலமும் நீடிக்கிறது.இந்த வழித்தடத்தில் இயக்கும் ஓரிரு பஸ்களும் மிகவும் பழமை வாய்ந்த நிலையில் உள்ளதால் விபத்து அபாயத்துடன், டிரைவர்கள் இயக்கி வருகின்றனர். பஸ் கூரைகள் பெயர்ந்து மழை காலங்களில் நனைந்தவாறு பயணிகள் பயணம் செய்யும் அவலமும் நீடிக்கிறது.கொலக்கம்பை, ஆர்செடின் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் அரசு பஸ்களை, ஒரு சில 'ட்ரிப்கள்' மட்டும், ஊட்டி- குன்னூர் இடையே இயக்கி கணக்கு காண்பிக்கின்றனர். இது குறித்து பல முறை புகார்கள் தெரிவித்தும், புதிய பஸ்களை இயக்க இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.எனவே, ஊட்டி- குனனுார் இடையே, 10 நிமிடங்களுக்கு ஒரு முறை புதிய அரசு பஸ்களை இயக்க, போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை