| ADDED : ஆக 20, 2024 10:09 PM
கோத்தகிரி : கோத்தகிரி கட்டபெட்டு - கக்குச்சி இடையே போக்குவரத்து இடையூறாக இருந்த, சாலையோர புதர் செடிகளை அகற்றும் பணி நடந்து வருகிறது.கட்டபெட்டு -- கக்குச்சி வழித்தடத்தில், 200க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. இவ்வழித்தடத்தில், கோத்தகிரி, குன்னுார் மற்றும் ஊட்டியில் இருந்து, அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தவிர, 50க்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்கள், தனியார் தேயிலைத் தொழிற்சாலை வாகனங்கள் உட்பட, அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் சென்று வருகின்றன.கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், சாலையோரத்தில் காட்டு செடிகள் ஆக்கிரமித்து, புதர் போல் காட்சி அளிக்கிறது. இதனால், விவசாயிகள் உட்பட, நடந்து செல்வோர் பாதிக்கப்படுகின்றனர். மேலும், வளைவுகளில் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாமல், விபத்துகள் நடந்தன. இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக, சாலையோர புதர் செடிகளை சாலை பணியாளர்கள் தொடர்ந்து அகற்றி வருகின்றனர்.