| ADDED : ஜூலை 24, 2024 12:07 AM
பந்தலுார்;பந்தலுார் அருகே யானைகள் கண்காணிப்பு பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.பந்தலுார் அருகே பிதர்காடு வனச்சரக எல்லைக்கு உட்பட்ட பகுதியில் குந்தலாடி பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள ஓர்கடவு, தானிமூலா, வாழவயல் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக, மூன்று யானைகள் கொண்ட கூட்டம் கிராம பகுதிகளுக்குள் புகுந்து, விவசாய விலை பயிர்களை சேதப்படுத்தி வருவதுடன் குடியிருப்புகளையும் சேதப்படுத்தி வருகிறது.இதனால், இந்த பகுதியில் வனச்சரகர் ரவி, வனவர் ஜார்ஜ் பிரவீன்சன் தலைமையிலான வனக்குழுவினர் பகல் மற்றும் இரவு நேரங்களில் யானைகளை கண்காணித்து, வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.வனச்சகர் ரவி கூறுகையில், 'தற்போது மழை பெய்து வருவதால், கிராமங்களை ஒட்டிய புல்வெளிகளில் யானைகளுக்கு தேவையான உணவு இருப்பதாலும், தோட்டங்களில் யானைகளின் விருப்ப உணவுகள் இருப்பதாலும் யானைகள் கிராமங்களுக்கு வருவது அதிகரித்து உள்ளது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் வனத்துறையினர், தொடர் கண்காணிப்பு மற்றும் யானைகளை வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கிராம பகுதியில் யானைகள் வந்தால் தகவல் தெரிவிக்கும் வகையில், அந்தந்த பகுதியில் காவல் பணியில் ஈடுபடும் வனத்துறையினரின் தொடர்பு எண்கள் வழங்கப்பட்டுள்ளது. அந்த எண்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. என்றார்.