சென்னையில் நடக்கும் மலர் கண்காட்சி ஊட்டியில் நாற்று தயாரிக்கும் பணி துரிதம்
ஊட்டி:சென்னையில் டிச., மாதம் நடக்க உள்ள மலர் கண்காட்சிக்காக, ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் நாற்று தயார் படுத்தும் பணி துரிதமாக நடந்து வருகிறது. நீலகிரி மாவட்டம், ஊட்டி தாவரவியல் பூங்காவை, செப்., 15ம் தேதி துவங்கும் இரண்டாவது சீசனுக்காக தயார் படுத்தும் பணி நடந்து வருகிறது. சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்க செய்ய ஏதுவாக, பல்வேறு வண்ணங்களில், ஆயிரக்கணக்கான மலர் நாற்றுகள் நடவு செய்து பராமரிப்பு பணி நடந்து வருகிறது.இந்நிலையில், சென்னையில் வரும் டிச., மாதம், மலர் கண்காட்சி நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. அதற்காக, ஊட்டி தாவரவியல் பூங்காவில் நாற்று தயார் படுத்தும் பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். பூங்கா நர்சரியில், மெரிகோல்டு, டேலியா உட்பட பல்வேறு வகையான மலர்களின் விதைகள் துாவப்பட்டு, கண்ணாடி 'டிரேயில்' பராமரிக்கப்பட்டு வருகிறது. விதை துளிர் விடும் நிலையில், பாத்திகளில் நடவு செய்து, மலர் நாற்றுகள் தயாரானவுடன், சென்னைக்கு அனுப்பப்பட உள்ளது.