| ADDED : ஜூலை 16, 2024 11:06 PM
குன்னுார்:நீலகிரி மாவட்டம் ஊரக பகுதிகளில் உதவி பெறும் துவக்க பள்ளிகளில், மாநில முதல்வரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யும் பணி துவங்கியது. குன்னுார் ஊராட்சி ஒன்றிய மேலுார் ஊராட்சி உட்லாண்டஸ் அரசு உதவி பெறும் துவக்க பள்ளியில், சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன் துவக்கி வைத்து பேசியதாவது:காலை உணவு திட்டத்தின் மூலம் துவக்கத்தில் நீலகிரியில், 256 அரசு துவக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் 9,102 மாணவ, மாணவியர் பயன் பெற்றுள்ளனர். காமராஜர் பிறந்த நாளான ஊரக பகுதிகளில் அரசு உதவி பெறும் துவக்க பள்ளிகளில்,1 முதல் 5ம் வகுப்பு வரை இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக, 24 பள்ளிகளில் 1,596 மாணவ, மாணயர்கள் பயனடைகின்றனர். கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் மாவட்டத்தில் முதற்கட்டமாக 1,334 பயனாளிகளுக்கு வீடு கட்டப்பட உள்ளது. இதுபோன்ற பல்வேறு திட்டங்கள் முதல்வரால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அமைச்சர் பேசினார். குன்னுார் ஊராட்சி ஒன்றியத்தில், 248 ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி வழங்கும் திட்டத்தில் 10 ஆசிரியர்களுக்கு முதற்கட்டமாக வழங்கப்பட்டது.