ஊட்டியில் இரண்டு நாட்கள் இலக்கிய திருவிழா
ஊட்டி; ஊட்டியில் நாளை இலக்கிய திருவிழா துவங்குகிறது.ஊட்டியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க, நீலகிரி நுாலகத்தில், இலக்கியம், கலாசாரம் மற்றும் அறிவுசார் பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக நாளை, 14ம் தேதி இலக்கிய விழா துவங்கி, 2 நாட்கள் நடக்கிறது.அதில், அரசியல், வரலாறு, சினிமா, இசை மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றில் புகழ் பெற்ற, 40க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள்,பேச்சாளர்கள் பங்கேற்கின்றனர்.அதில், தமிழ், ஆங்கிலம் என இருமொழி அமர்வுகள், நாட்டின் மொழியியலில் பன்முக தன்மை உரையாடல்கள் இடம் பெறுகின்றன. நாட்டின், 780 மொழிகளை பாதுகாப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயல்படும், அறிஞரும் மொழியியலாளர் டாக்டர் கணேஷ் தேவிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளது. நம் நாட்டின் சினிமாவின் பரிணாம வளர்ச்சி குறித்த விவாதம் நடக்க உள்ளது.மறைந்த ஜாகிர் உசேன் நினைவாக, தபேலா மேஸ்ட்ரோ; அவரது உலகளாவிய தாளம் மற்றும் இசையின் தாக்கம் குறித்த அமர்வு இடம் பெறுகிறது. 'ஆரோக்கியம், மனநிறைவு மற்றும் நல்வாழ்வு குறித்த அமர்வு; ரஷ்மி குழுவினரின் யோகா கருத்தரங்கு,' உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. ஏற்பாடுகளை, விழா குழு அறங்காவலர்கள், அருண் ராமன், சைரஸ் பரூச்சா, கீதா சீனிவாசன், கல்பனாகர், டைட்டஸ் பின்டோ மற்றும் ஏற்பாடு குழுவினர் செய்து வருகின்றனர்.