| ADDED : ஆக 05, 2024 06:37 AM
பந்தலுார் : பந்தலூர் அருகே சேரம்பாடி சுற்று வட்டார பகுதிகளில் அதிகளவிலான கிராமங்கள் அமைந்துள்ளன. வனப்பகுதிகள் மற்றும் தேயிலை தோட்டங்களை ஒட்டி அமைந்துள்ளது. இந்த பகுதிகளில் யானை உள்ளிட்ட வனவிலங்குகள், குடியிருப்புகளை சேதப்படுத்துவது, மனிதர்களை தாக்குவது, விவசாய பயிர்களை சேதப்படுத்துவது என, தொடர்ந்து மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.வனப் பகுதிகளில் வன விலங்குகளுக்கு தேவையான உணவுகளை பூர்த்தி செய்யவும், அகழி மற்றும் சோலார் அமைத்து கிராம பகுதிக்குள் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் வராமல் தடுக்கவும் பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.இது குறித்து வனத்துறை கண்டுகொள்ளாத நிலையில், கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாவில் பொதுமக்கள் அரசியல் சார்பின்றி இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதில் சேரம்பாடியில் மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு இயக்கம் சார்பில், முதல் கட்ட கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் தலைவர் சிபி தலைமையில் நடந்தது. அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.இதில் தொடர்ந்து வனவிலங்குகளால் மனித உயிர்கள் இறப்பதை தடுக்க வேண்டும். மக்கள் வசிப்பிட பகுதியில் உள்ள காடுகளை அகற்றவும், விவசாயத் தோட்டங்களை பாதுகாக்கவும் வேண்டும். அகழி மற்றும் மின்வேலி அமைத்து, யானைகளுக்கு தேவையான உணவை, வனப்பகுதிக்குள் பூர்த்தி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி பேசப்பட்டது.ஆர்ப்பாட்டத்தில் செயலாளர் பழனி, பொருளாளர் ஆசிம், ஒருங்கிணைப்பாளர் மகாவிஷ்ணு, வியாபாரிகள் சங்கத் தலைவர் ரவி உள்ளிட்ட அனைத்து கட்சி நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.