127வது மலர் கண்காட்சி ஊட்டியில் மே 16ல் துவக்கம்
ஊட்டி:நீலகிரி மாவட்டம் ஊட்டியில், ௧௨௭வது மலர் கண்காட்சி மே ௧௬ம் தேதி துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் மே மாதம் கோடை விழா நடத்தப்படுகிறது. நடப்பாண்டின் கோடை விழா ஆலோசனை கூட்டம் நேற்று காலை கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் லட்சுமி பவ்யா தலைமை வகித்தார். கூட்டத்தில் கோடை சீசனில் நடக்க உள்ள முக்கிய நிகழ்ச்சிகள் குறித்து அறிவிக்கப்பட்டது. கோத்தகிரியில், 13வது காய்கறி கண்காட்சி மே 3 மற்றும் 4ம் தேதிகளில் நடக்கிறது. கூடலுாரில், 12வது வாசனை திரவிய கண்காட்சி, 9, 10, 11 ஆகிய மூன்று நாட்கள் நடக்கிறது. ஊட்டி ரோஜா பூங்காவில், 20வது ரோஜா கண்காட்சி, 10, 11, 12 ஆகிய மூன்று நாட்கள் நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியாக, ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில், 127வது மலர் கண்காட்சி, 16ம் தேதி துவங்கி 21ம் தேதி வரை நடக்கிறது.குன்னுாரில், 65வது பழ கண்காட்சி மே 23 முதல் 25 வரை நடக்கிறது. காட்டேரி பூங்காவில் முதல் முறையாக மலை பயிர்கள் காட்சி, 31 மற்றும் ஜூன் 1ம் தேதி நடக்கிறது.