ஊட்டியில் 2வது சீசன் துவக்கம் பூங்கா மாடங்களில் காட்சிப்படுத்தப்பட்ட மலர் தொட்டிகள்
ஊட்டி,:ஊட்டியில் இரண்டாவது சீசன் துவங்கியுள்ளதை அடுத்து, தாவரவியல் பூங்கா மாடங்களில், 10 ஆயிரம் மலர் தொட்டிகள் சுற்றுலா பயணிகள் பார்வைக்கு வைக்கப்பட்டன.நீலகிரி மாவட்டம், ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, உலக அளவில் சிறந்து விளங்குகிறது. ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் பூங்காவை பார்வையிட்டு செல்கின்றனர்.ஊட்டியில் இரண்டாவது சீசன் துவங்கி உள்ள நிலையில், இந்த பூங்காவில், 250 வகை மலர்களில், 4 லட்சம் மலர்கள் பூத்து தற்போது சுற்றுலாப் பயணிகளை வரவேற்கின்றன.அதில், 'டேலியா, சால்வியா இன்காமேரி கோல்டு, பிரெஞ்ச் மேரி கோல்டு, டெய்சி, காலண்டுலா, ஐரிஸ், பால்சம் மற்றும் ஆந்துாரியம்,' போன்ற வெளிநாட்டு மலர் வகைகளும் உள்ளன. மேலும், சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், தயார் செய்யப்பட்ட, 10 ஆயிரம் மலர் தொட்டிகளை நேற்று மாடங்களில் காட்சிப்படுத்தும் பணி நடந்தது. இதனை, பயணிகள் பார்வைக்கு, கலெக்டர் லட்சுமி பவ்யா துவக்கி வைத்தார்.இதை தவிர, குழந்தைகள் வெளியே சென்று விளையாடும் விழிப்புணர்வை துாண்டும் வகையில், மலர் தொட்டிகளை கொண்டு, மட்டைப்பந்து மற்றும் பட்டாம் பூச்சி போன்ற வடிவமைப்புகள் புல்வெளியில் வைக்கப்பட்டு இருந்தன. இந்த அலங்கார திடல், ஒரு மாத காலம் இருக்கும். வண்ணமயமான மலர் தொட்டிகளை சுற்றுலா பயணிகள் கண்டு மகிழ்ந்தனர். நிகழ்ச்சியில், தோட்டக்கலை இணை இயக்குனர் சிபிலா மேரி, உதவி இயக்குனர்கள் பபிதா மற்றும் அனிதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.