தேசிய என்.சி.சி., மலையேற்ற பயிற்சி முதற்கட்டமாக 510 மாணவியருக்கு சான்றிதழ்
குன்னுார், ; நீலகிரியில், தேசிய என்.சி.சி., மலையேற்ற பயிற்சி முகாமில் முதற்கட்டமாக பயிற்சி முடித்த, 510 மாணவியருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.நீலகிரி மாவட்டத்தில், நடப்பாண்டுக்கான தேசிய அளவிலான என்.சி.சி., மாணவியர் மலையேற்ற பயிற்சி முகாம் துவங்கியது.முதற்கட்டமாக கடந்த, 4ம் தேதியிலிருந்து, 11ம் தேதி வரை, 8 நாட்கள், ஊட்டி, குன்னுார் மற்றும் சுற்றுப்புற கிராம பகுதிகளில், மலையேற்ற பயிற்சியை மேற்கொண்டனர். ரயிலில் பயணம் மேற்கொண்டு ரயில் நிலையங்களில் துாய்மை பணிகள் செய்தனர்.குன்னுார் எம்.ஆர்.சி., ராணுவ பயிற்சி மையம், ராணுவ அருங்காட்சியகத்தை பார்வையிட்டனர். மாணவியரிடையே தேசிய ஒருமைப்பாடு, உடல் வலிமை, மனவலிமை, தேசிய நல்லிணக்கம், ராணுவத்தின் பெருமை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதன் நிறைவு நாள் நிகழ்ச்சி, முத்தொரை பாலாடா ஏகலைவா பள்ளி வளாகத்தில் நடந்தது. விழாவிற்கு கோவை மாவட்ட குழு கமாண்டர் கர்னல் ராமநாதன் தலைமை வகித்து மாணவியரை பாராட்டி பேசினார்.விழாவில் பரதநாட்டியம் உட்பட பல்வேறு மாநிலக் கலாசார நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இதில் சாதனை புரிந்த மாணவியருக்கு கேடயம் வழங்கப்பட்டது. முதற்கட்டமாக, தமிழகம், புதுவை அந்தமான் நிக்கோபார், கேரளா, லட்சத்தீவு, கர்நாடகா, கோவா மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து, பங்கேற்ற, 510 மாணவியருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.விழாவில், என்.சி.சி., கேம்ப் கமாண்டன்ட் கர்னல் தீபக், கேம்ப் துணை கமாண்டன்ட் லெப். கர்னல் கார்த்திக் மோகன், ஒருங்கிணைப்பாளர் சந்தோஷ் பாதுகாப்பு அலுவலர் மேஜர் மன்ஜித் கோர் ஆகியோர் ஏற்பாடுகளை செய்தனர். 2ம் கட்ட முகாம் 20ம் தேதி வரை நடக்கிறது.